Skip to main content

திருப்பியடிக்க கற்றுத் தந்தார்... தலைவரான 'தாதா'!

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

dada

 

"இந்திய அணி முன்பே திறமையான அணி. ஆனால், அமைதியான அணி. அவர்களுடன் ஆடுவது எப்போதும் இனிமையான அனுபவம். ஆனால், அவர் தலைமையேற்ற பிறகு இந்திய அணியோடு விளையாடுவது என்பது போர்க்களத்தில் போரிடுவது போன்று மாறியது" இங்கிலாந்து அணியின் கேப்டன் நசீர் ஹுசைன் கங்குலியைப் பற்றி கூறிய வார்த்தைகள் இவை.

 

அமைதியாக இருந்த இந்திய அணியை எரிமலை ஆக்கிய பெருமை கங்குலியையே சேரும். அறிமுக டெஸ்ட் போட்டியிலே லார்ட்ஸ் மைதானத்தில் சதத்தோடு தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கியவர் கங்குலி. இந்தியாவுக்காக அதிக சர்வதேச ரன்கள் அடித்தவர்களில் நான்காவது இடம், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இடது கை பேட்ஸ்மேன்கள் வரிசையில் மூன்றாவது இடம், சச்சின், ரோஹித்திற்குப் பிறகு உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு அதிகம் சதம் அடித்தவர், உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு அதிக ரன்கள் அடித்த கேப்டன் என ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் கங்குலி அதிகம் கொண்டாடப்படுவது அவரது கேப்டன்ஷிப்பிற்காகத்தான்.

 

சச்சின் கிரிக்கெட்டின் ஜெண்டில்மேன்களில் ஒருவர். அவர் களத்தில் கோவப்பட்டு சண்டையிடுவது அரிது. அணியின் தோல்விகளால் சச்சின் கேப்டன் பதவியிலிருந்து விலக, கங்குலி அணிக்கு தலைமை ஏற்றார். அவரின் ஆக்ரோஷம் அணிவீரர்களின் எண்ணத்தில் ஏறியது. அதுவரை அமைதியான இந்திய கேப்டன்களை மட்டுமே பாத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு, இலங்கை வீரரை மைதானத்தில் எச்சரித்தது, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டிவ் வாகை டாஸ் போட காத்திருக்க வைத்தது, இந்தியாவில் தொடரை வென்றபிறகு மைதானத்தில் சட்டையைக் கழட்டிச் சுழற்றிய இங்கிலாந்து அணிக்கு பதிலடியாக நாட்வெஸ்ட் சீரிஸ்க்கு பின்பு லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் சட்டையைக் கழட்டிச் சுழற்றியது என ஆக்ரோஷமான இந்திய கேப்டனை பிடித்திருந்தது. இந்திய அணித் தலைவர், ரசிகர்களுக்குத் தாதாவனார். 

 

ஆட்டுமந்தைகளை வழிநடத்தும் சிங்கங்களை விட, சிங்கத்தின் தலைமையில் இருக்கும் ஆட்டுமந்தை வலிமையானது என்பார்கள். ஏனென்றால், தலைவரின் குணத்தையே படைகளும் பிரதிபலிக்கும். சிங்கத்தின் தலைமையிலான ஆடுகளுக்கே வலிமை அதிகம் என்றால், கங்குலி எனும் சிங்கத்தின் தலைமையில் மற்ற இளம் சிங்கங்களும் இணைந்தால்? வெற்றிகள் குவியும்தானே? அதுதான் நடந்தது. இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கேப்டன் என்றால் அது கங்குலிதான். இந்திய அணி அவர் தலைமையில் வெளிநாட்டு மண்ணில் 11 வெற்றிகளைப் பெற்றுள்ளது. விராட் கோலி எட்டு வெற்றிகளோடு அடுத்த இடத்தில் இருக்கிறார். "நாங்கள் எழுந்துநின்று திருப்பி திருப்பி அடிக்க கற்றிருக்கிறோம், இதை ஆரம்பித்து வைத்தது தாதாவின் அணி, நாங்கள் அதை அப்படியே பின்பற்றுகிறோம்" தற்போதைய இந்திய அணியின் ஆக்ரோஷமான ஆட்டத்தையும் அதிரடி வெற்றிகளையும் பற்றி பேசுகையில் கோலி சொன்ன வார்த்தைகள் இவை. இதன் மூலமே தாதாவின் தாக்கத்தை உணரலாம். 2000-2001 சூதாட்டப் புயலுக்கு எந்த அணியாக இருந்தாலும் நிலைகுலைந்து போயிருக்கும். ஆனால், அந்த அணியை உலகக்கோப்பை இறுதிவரை அழைத்துச் சென்றார் தாதா. கங்குலி ஐசிசி கோப்பையை வென்றதில்லை என்பார்கள். ஆனால், ஜெயித்திருக்கவேண்டிய சாம்பியன்ஸ் ட்ரோஃபியை மழையின் காரணமாக இலங்கையோடு பகிர்ந்துகொள்ள வேண்டியதாகிவிட்டது என்பதை மறந்துபோனார்கள்.
 

dada

 

கங்குலி கேப்டனாக போட்டிகளை மட்டும் வெல்லவில்லை, எதிர்காலத்திற்கான அணியையும் உருவாக்கினார். மிடில் ஆர்டரில் ஆடிய சேவாக்கை ஒப்பனராக அனுப்ப, அவர் ஒப்பனர்களின் இலக்கணத்தையே மாற்றினார். கோலி, அஸ்வின், ஜடேஜா எனப் பல இளம் வீரர்களுக்கு துவக்ககாலச் சறுக்கல்களில் எண்ணிலடங்கா வாய்ப்புகளை வழங்கிய தோனிக்கு, அவரது தொடக்க கால சொதப்பல்களில் வாய்ப்பு வழங்கியதோடு, அவரை இந்திய அணியின் கேப்டனாகவும் மாற்றினார் கங்குலி. கங்குலியைப் போல் என்னிடம் நம்பிக்கை வைத்த கேப்டன் யாருமில்லை என்றார் யுவராஜ். ஹர்பஜன் சிங்கை போராடி அணிக்குள் அழைத்து வந்தார். கங்குலி அணியில் சிங்கக் குட்டிகளாய் இருந்தவர்கள் கங்குலி வைத்த நம்பிக்கையால் சிங்கங்களாகச் சீறி 'இருபது ஓவர் உலகக்கோப்பை', இருபத்தெட்டு வருடத்திற்குப் பிறகு 'ஒருநாள் உலகக் கோப்பை'களை வெல்ல காரணமாயிருந்தார்கள். கங்குலி உலகக்கோப்பையை வென்றதில்லை. ஆனால், இந்தியாவின் உலகக்கோப்பை வெற்றியில் அவருக்கும் பங்கு இருக்கிறது. அதை யாராலும் மறுக்க முடியாது. 
 

cnc


'தாதா' இன்று இந்திய கிரிக்கெட் சங்கத் தலைவர். பகல்-இரவு ஆட்டங்களுக்கு கோலியை வினாடிகளில் சம்மதிக்க வைத்தது. பல தடைகளைக் கடந்தும் ஐபிஎல் போட்டிகளை நடத்தியது என இன்றும் அதிரடி காட்டுகிறார் தாதா. பெண்கள் கிரிக்கெட்டை முன்னேற்றவும் நடவடிக்கைகள் தொடக்கியுள்ளார். பிசிசிஐ -க்கு சரியான தலைமை இல்லாமையால் இந்திய கிரிக்கெட் அணியும், நிர்வாகமும் சிக்கல்களையும் அவப்பெயரையும் சந்தித்தது. அப்போது கங்குலி தலைவராக வாய்ப்பு என்றதும் ரசிகர்களை உற்சாகம் தொற்றியது. ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே அவர் நடவடிக்கைகள் இருக்க, உற்சாகம் இரட்டிப்பானது. கங்குலியின் தலைவர் பதவி குறித்து அடுத்தாண்டு நீதிமன்றம் முடிவெடுக்க இருக்கிறது. தலைவராக, வங்கப்புலியின் பாய்ச்சல் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அதுவே, இந்திய அணியின் பாய்ச்சலைத் தீவிரப்படுத்தும் என்பதை மறுக்க இயலாது.

 

 

 

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.