16 ஆவது ஐபிஎல் சீசன் மார்ச் 31 இல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் லீக் ஆட்டங்களில் வெற்றி பெற பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றன. அதே வேளையில் ஏலத்தின் போது எடுக்கப்பட்ட வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதும் மாற்று வீரர் அணியில் சேர்க்கப்படுவதுமான நிகழ்வுகளும் தொடர்கின்றன.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஜை ரிச்சர்ட்சன் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய பந்துவீச்சாளரான ரிலே மெர்ட்ரித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான பும்ரா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து பெங்களூர் உடனான போட்டியின் போது கூட பெங்களூரு அணியின் கோலியும் டுப்ளசியும் மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளரான ஜை ரிச்சர்ட்சன் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதால் அணி மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானதாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளருக்கு மாற்றாக ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெர்ட்ரித் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரூ 1.5 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
தற்போது வாங்கப்பட்டுள்ள ரிலே மெர்ட்ரித் ஆஸ்திரேலிய அணிக்காக 5 டி20 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் கடந்தாண்டு மும்பை அணிக்காக விளையாடிய அவர் 8 ஆட்டங்களில் விளையாடி 8 விக்கெட்களை வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது. மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்து வரும் 8 ஆம் தேதி சென்னை அணியுடன் மோதுகிறது. அப்போட்டியில் ரிலே மெர்ட்ரித் மும்பை அணிக்காக ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.