வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து இடையே தரம்சாலாவில் உலகக் கோப்பையின் 7 ஆவது லீக் ஆட்டம் காலை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, வங்கதேச வீரர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்து ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மாலன், பேர்ஸ்டோ இணை சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் அரைசதம் கடந்த நிலையில், பேர்ஸ்டோ 52 ரன்கள் எடுத்து ஷகிப் பந்து வீச்சில் ஆட்டம் இழக்க, அடுத்து மாலனுடன் ஜோ ரூட் இணைந்தார். ரூட் அவ்வப்போது அதிரடி காட்ட, மாலனோ வங்கதேச பந்து வீச்சை நாலா பக்கமும் சிதறடித்து ரன்கள் குவித்தார். சிறப்பாக ஆடி சதம் கடந்த மாலன், 16 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் உட்பட 140 ரன்கள் குவித்து மெஹெதி ஹசன் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து வந்த பட்லர் 20, ப்ரூக் 20, சாம் கரன் 11, வோக்ஸ் 14 என சொற்ப ரன்களில் வெளியேற, ஜோ ரூட் மட்டும் அரைசதம் அடித்து 82 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது.
வங்கதேச தரப்பில் மெஹெதி ஹசன் 4 விக்கெட்டுகளும், இஸ்லாம் 3 விக்கெட்டுகளும், ஷகிப் மற்றும் அஹமத் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. தொடக்க ஆட்டக்காரர் டன்சித் ஹசன் 1 ரன்னிலும், ஷான்டோ ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் ஷகிப் 1 ரன்னிலும், மிராஜ் 8 ரன்னிலும் வெளியேறினர். தொடர்ந்து வங்கதேசத்தின் விக்கெட்கள் விழுந்து வந்தன. வங்கதேச அணியில் இரு வீரர்கள் மட்டுமே அரை சதத்தை கடந்தனர். அதன்படி லிட்டன் தாஸ் 76 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அதேபோல், முஷ்பிகுர் ரஹீம் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டாப்லி வீசிய பந்தில் அடில் ரஷித்திடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
தொடர்ந்து வங்கதேச அணி 48.2 ஓவரில் 227 ரன்கள் குவித்து தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம், இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணியில் ரீஸ் டோப்லி நான்கு விக்கெட்களை கைப்பற்றினார். கிறிஸ் வோக்ஸ் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்.
இதுவரை இரு போட்டியில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி கடந்த 5ம் தேதி நியூசிலாந்து அணியுடன் மோதியது. அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று விளையாடி இரண்டாம் ஆட்டத்தில், வங்கதேச அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2023ம் ஆண்டு உலகக் கோப்பையில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலம், இங்கிலாந்து அணி இரண்டு புள்ளிகளுடன் அட்டவணையில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.