இந்தியாவும், இலங்கையும் மோதும் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்த தொடருக்குப் பின்னர் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுடன் இருபது ஓவர் போட்டியில் விளையாடவுள்ளது. அதனை தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்து சென்று, கடந்த வருடம் கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. அந்த டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிரான ஒரு இருபது ஓவர் போட்டியிலும் இந்தியா விளையாடவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு இந்திய அணி, அக்டோபர் மாதத்தில் தொடங்கும் இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இந்தநிலையில் ஜூலைக்கும் அக்டோபரில் தொடங்க இருக்கும் இருபது ஓவர் உலகக்கோப்பை தொடருக்கும் இடைப்பட்ட காலத்தில், இந்திய அணி மேற்கு இந்தியத் தீவுகளுக்கும், ஜிம்பாப்வேக்கும் பயணம் செய்யவுள்ளதாகவும், ஆசியக் கோப்பை போட்டியில் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு தொடர்ச்சியான போட்டிகளில் விளையாடுவது வீரர்களுக்குச் சோர்வை ஏற்படுத்தலாம் என்பதால், ஒரேநேரத்தில் இரண்டு இந்திய அணிகளை விளையாடவைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜிம்பாப்வேக்கு இரண்டாம் கட்ட இந்திய அணி செல்லும் எனவும், முன்னணி வீரர்களைக் கொண்ட இந்திய அணி ஆசியா கோப்பையில் விளையாடும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இதற்காக 35 வீரர்களைத் தேர்வு செய்வது குறித்து இந்திய அணியின் தேர்வாளர்கள் ஆராயத் தொடங்கிவிட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.