Skip to main content

ஊரடங்கிலும் கோடிகளில் வருமானம் ஈட்டிய விளையாட்டு வீரர்கள்... டாப் 10 பட்டியல்...

Published on 05/06/2020 | Edited on 05/06/2020

 

attains top 10 sports person earning during lockdown

 

ஊரடங்கு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி இன்ஸ்டகிராம் மூலமாக ரூ. 3.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளார்.


உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், இந்த காலகட்டத்தில் அதிகம் வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களின் பட்டியலை அட்டெய்ன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மார்ச் 12 முதல் மே 14 வரை இன்ஸ்டகிராம் மூலமாக அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களின் இந்த பட்டியலில், ரூ. 17.19 கோடி வருவாயுடன் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் மெஸ்ஸி, நெய்மர் ஆகியோர் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். 10 விளையாட்டு வீரர்களை கொண்ட இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய விளையாட்டு வீரர் கோலி ஆவார். கோலி இந்த ஊரடங்கு காலத்தில் மட்டும் இன்ஸ்டாகிராம் மூலமாக ரூ. 3.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளார். ஊரடங்கு காலகட்டத்தில் இன்ஸ்டாகிராமில் வெறும் 3 விளம்பர பதிவுகளை மட்டுமே கோலி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

RCB vs SRH: ஒன் மேன் ஷோ காட்டிய தினேஷ் கார்த்திக்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Dinesh Karthik who showed one man show!

40 ஓவர்கள் 549 ரன்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் பந்து வீச்சாளர்கள் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் நாளாகவும், பேட்ஸ்மேன்கள் வாழ்க்கையில் பசுமையான நினைவுகளாக மனதில் நிறுத்தும் நாளாகவும் ஏப்ரல் 15 இருக்கும் என்றால் அது மிகையாகாது.

ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவால் 434 அடிக்கப்பட்ட போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தூங்கச் சென்று விட்டனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் அந்த 434 ஐயும் துரத்திப் பிடித்து வரலாறு படைத்தனர், தென் ஆப்பிரிக்க அணியினர். முக்கியமாக கிப்ஸின் ஆட்டமானது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.

அந்த ஆட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆட்டம். கிப்ஸ் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த வெற்றி போல ஆர்.சி.பிக்கும் கிடைக்க வேண்டியது. ஆனால் மிடில் ஆர்டர் சொதப்பலால் வெற்றிக்கனியின் அருகில் போய் தவறவிட்டுள்ளது ஆர்.சி.பி.

ஐபிஎல்2024 இன் 30ஆவது லீக் ஆட்டம் பெஙகளூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஏன் பவுலிங்கை தேர்வு செய்தோம் என்று நினைக்கும் அளவுக்கு ஹைதராபாத் அணி பேட்டிங் இருந்தது. ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் தங்களது அலட்சியமான அதிரடியால் எதிரணி பவுலர்களை நிலைகுலைய வைத்தனர்.

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியர்களின் தூக்கத்தைக் கெடுத்த ஹெட், நேற்று பெங்களூரு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தார். ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக பார்க்கப்பட்ட ஹெட், இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 40 பந்துகளி சத்தைக் கடந்தார். கடந்த சில ஆட்டங்களாகவே ஃபயர் மோடில் இருக்கும் கிளாசன், ஹெட்டின் அதிரடிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 31 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். மார்க்ரமும் தான் எதிர்கொண்ட பந்துகளை மைதானத்தில் சுழல விட்டு 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

இவர்களின் அதிரடியை அலேக்காக தூக்கி சாப்பிட்டார் அப்து சமத். 10 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஹைதராபாத் முந்தைய சாதனையான 277 ஐ முறியடித்து 287 ரன்கள் எனும் புதிய வரலாற்றைப் பதித்தது. பெங்களூரு சார்பில் பந்து வீசிய அனைவரின் எகானமியும் 10.00 க்கு மேல் இருந்தது.

பின்னர் 288 என்ற வரலாற்று இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு மோசமான தோல்விதானோ என்று ரசிகர்கள் அஞ்சிய வேளையில், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று கோலி மற்றும் டு பிளசிஸ் அதிரடி காட்டினர். கோலி 20 பந்துகளில் 42, டு பிளசிஸ் 28 பந்துகளில் 62 என ரன் ரேட்டை அதிகரித்து இலக்கைத் துரத்தினாலும் அடுத்து வந்த இளம் வீரர்கள் வில் ஜேக்ஸ் 7, பட்டிதார் 9, செளகான் 0 என ஏமாற்றினர்.

பின்னர் வந்த பினிஷர் கார்த்திக், அதிரடியின் உச்சம் காட்டினார் என்று சொன்னால் அது மிகையாகாது. நடராஜன் பந்தில் அடித்த ஒரு இமாலய சிக்சர் 108 மீட்டர் எனும் புதிய உச்சத்தை ஐபிஎல் 2024இல் எட்டியது. 7 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். அனுஜ் ராவத்தும் 14 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். வரலாற்று வெற்றியாக இருந்திருக்க வேண்டிய ஆட்டம் மிடில் ஆர்டர் சொதப்பியதால், வெற்றிக்கு அருகே வந்து கை நழுவியது. 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு தோல்வியைத் தழுவினாலும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி பேட்டிங் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. மும்பை அணியுடனான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிய போது ரோஹித், தினேஷ் கார்த்திக்கை கிண்டல் செய்யும் வகையில் உலகக்கோப்பை தேர்வு உள்ளது என்றார். தற்போது உண்மையிலேயே உலகக்கோப்பை அணிக்கு தன்னை தேர்வாளர்கள் உற்றுநோக்கும் வகையில் ஒரு இன்னிங்சை ஆடியுள்ளார் டி.கே என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்!