Skip to main content

தலைமை பயிற்சியாளர் ஆகும் ஆஷிஷ் நெஹ்ரா; ஆலோசகராக கேரி கிர்ஸ்டன் - விரைவில் அறிவிக்கும் ஐபிஎல் அணி

Published on 04/01/2022 | Edited on 04/01/2022

 

ashish nehra

 

2022 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரில், அகமதாபாத், லக்னோ ஆகிய இரண்டு புதிய அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்தநிலையில் அகமதாபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா நியமிக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

அதேபோல் அகமதாபாத் அணியின் ஆலோசகராக கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2011 ஆம் ஆண்டு இந்தியா உலக கோப்பையை வென்றபோது, அணியின் பயிற்சியாளராக இருந்தவர் கேரி கிர்ஸ்டன் என்பது குறிப்பிடத்தக்கது. 2011 இந்திய உலகக்கோப்பை அணியில் ஆஷிஷ் நெஹ்ராவும் இடம்பெற்றிருந்தார்.

 

மேலும் கேரி கிர்ஸ்டன் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா இருவருமே பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேரி கிர்ஸ்டன் மற்றும் ஆஷிஷ் நெஹ்ராவின் நியமனங்களை அகமதாபாத் அணி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறியுள்ளன.

 

 

Next Story

"விராட் கோலி கவனம் செலுத்த வேண்டிய இடம் இதுதான்" -நெஹ்ரா அறிவுரை

Published on 30/11/2020 | Edited on 30/11/2020

 

Ashish Nehra

 

 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக இரு தோல்விகளைச் சந்தித்த இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இழந்துள்ளது. பேட்டிங்கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணி இரு போட்டிகளிலும் 300 ரன்களுக்கும் மேல் குவித்தது. அதே நேரத்தில் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் படு சொதப்பலாக அமைய இரு போட்டிகளிலும் வெற்றிக்கு அருகில் கூட நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், விராட் கோலியின் அணி வழிநடத்தும் திறன் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

 

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ரா இது குறித்து பேசுகையில், "விராட் கோலி முகமது ஷமிக்கு இரு ஓவர்கள் கொடுத்தார். அதன்பிறகு நவ்தீப் சைனியை அழைத்தார். வேறுமுனையில் இருந்து ஷமி பந்துவீச வேண்டும் என்று விராட் கோலி விரும்பியிருக்கலாம். ஆனால், புது பந்தில் பும்ராவிற்கு எதற்கு இரு ஓவர்கள் மட்டும் கொடுத்தார் என்று எனக்கு தெரியவில்லை. பந்துவீச்சில் அவர் அடிக்கடி மாற்றம் செய்கிறார் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அவர் கையில் 5 பவுலர்கள் மட்டுமே இருந்தனர். மயங்க் அகர்வால் மற்றும் ஹர்திக் பாண்டியா பந்துவீசியது களத்தில் எடுக்கப்பட்ட முடிவு. இந்தியாவிற்கு சாதகமாக போட்டி அமைந்திருந்தால் இவர்கள் இருவரும் பந்துவீசி நாம் பார்த்திருக்க முடியாது. விராட் கோலி அவசரப்படுவது தெரிகிறது. கடந்த போட்டியிலும் இதுதான் நடந்தது. 350 ரன்களை சில முறை அவர் சேசிங் செய்துள்ளார். ஆகையால் அவருக்கு அது பெரிய விஷயம் இல்லை. கடந்த போட்டியில் அவர் 375 ரன்கள் சேசிங் செய்வது போல விளையாடாமல் 475 ரன்கள் சேசிங் செய்ய இருப்பது போல விளையாடினார். விராட் கோலி அவசரத்தனம் மிகுந்த கேப்டனாக இருக்கிறார். அடிக்கடி பந்துவீச்சில் மாற்றம் செய்கிறார். இது அவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய இடம்" எனக் கூறினார்.

 

 

Next Story

"அதுதான் தோனி" - கேரி கிர்ஸ்டன் பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்...

Published on 17/07/2020 | Edited on 17/07/2020

 

gary kirsten about dhoni

 

2011 ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார் கேரி கிர்ஸ்டன். 

 

உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், தோனி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் சந்தித்ததிலேயே மிகவும் சிறந்த மனிதர் தோனி, அவர் ஒரு சிறந்த தலைவர். 2011 ல் நடந்த ஒரு சம்பவம் என்னால் மறக்கமுடியாதது. 2011 உலகக்கோப்பைக்கு முன், நாங்கள் அணியாக பெங்களூருவில் உள்ள ஃபிளைட் ஸ்கூலுக்கு செல்ல வேண்டியிருந்தது. அந்த நிகழ்ச்சிக்காக நாங்கள் அனைவரும் தயாராக இருந்தோம், ஆனால், அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னையும், பேடி அப்டன், எரிக் சிம்மன்ஸ் ஆகியோரையும் வெளிநாட்டினர் எனக்கூறி பாதுகாப்பு விஷயங்களை காரணம் காட்டி அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனைப்பார்த்த தோனி, அந்த நிகழ்ச்சியையே ரத்து செய்துவிட்டார். இவர்கள் என் அணியினர், இவர்கள் அனுமதிக்கப்படவில்லை எனில் யாரும் போக வேண்டியதில்லை என்று தோனி கூறினார், அதுதான் தோனி" என நெகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.