Skip to main content

குழந்தையின்மைக்கு இது தான் தீர்வு - பிரபல கருவுறுதல் நிபுணர் டாக்டர் தாட்சாயினி விளக்கம்

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

Infertility Specialist  Dr. Dakshayani

 

குழந்தையின்மை பிரச்சனையால் தற்போது உலக அளவில் பல தம்பதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 சதவீதத்திற்கும் அதிகமான தம்பதியினருக்கு இந்தப் பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனை எதனால் ஏற்படுகிறது, இதற்கான தீர்வுகள் என்னென்ன என்பது குறித்து கருவுறுதல் நிபுணர் டாக்டர் தாட்சாயினி விளக்குகிறார்.

 

திருமணமாகி ஒரு வருடத்திற்குப் பிறகும் குழந்தை பெறுவதில் சிக்கல் இருந்தால், கருவுறாமை பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். குழந்தை பெற முடியாவிட்டால், அதனால் சமுதாயத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். தொழில்நுட்பங்களும் சமூகப் புரிதலும் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் இதை நாங்கள் தம்பதியினருக்கான பிரச்சனையாகத் தான் பார்க்கிறோம். சில தம்பதியினருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாவிட்டாலும் கருவுறாமை ஏற்படும்.

 

கர்ப்பப்பையில் ஏற்படும் கட்டி, சினைப்பையில் ஏற்படும் கட்டி ஆகியவற்றால் கருவுறாமை ஏற்படலாம். ஆண்களின் விந்தணுக்களில் உள்ள குறைபாடுகளாலும் கருவுறாமை ஏற்படும். பல நேரங்களில் கணவன், மனைவி இருவருக்கும் புரிதல் இல்லாத காரணத்தினாலும் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. உடல் பருமனும் இதற்கான காரணங்களில் ஒன்று. கர்ப்பப்பைக்கும் சினைப்பைக்கும் இடையில் உள்ள குழாயில் ஏற்படும் அடைப்பும் ஒரு காரணம்.

 

கருவுறாமை பிரச்சனை ஆண்கள் மற்றும் பெண்களுக்குப் பொதுவானது. இதற்கு முழுமையான மருத்துவம் கிடைக்காததாலும் பலர் அவதிப்படுகின்றனர். இது குறித்த மருத்துவத்தை நாடுபவர்கள், தம்பதியராக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதன் மூலம் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதை முழுமையாக அறிந்து அதற்கான சிகிச்சைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க முடியும். 

 

முதலில் சாதாரண மருத்துவ முறைகளின் மூலம் சிகிச்சை வழங்கப்படும். வாழ்வியல் முறை மாற்றங்களின் மூலமும் பெரிய மாற்றம் ஏற்படும். அதிக காலமாகியும் சிகிச்சை பலனளிக்கவில்லை என்றால் புதிய சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படும். லேப்ரோஸ்கோபி சிகிச்சை இதில் முக்கியமானது. கர்ப்பப்பையில் உள்ள பிரச்சனைகள் பரிசோதனை மூலம் கண்டறியப்படும். சரியான சிகிச்சையின் மூலம் நிச்சயம் இந்த பிரச்சனையை குணப்படுத்த முடியும்.

 

கருத்தரித்தல் மையங்களில் தற்போது ஆலோசகர்கள் பலர் உள்ளனர். அவர்களோடு உரையாடும்போது வீட்டில் கணவன், மனைவி இடையே நிலவும் பிரச்சனைகளைச் சரி செய்ய ஆலோசனைகள் வழங்கப்படும். கூட்டுக் குடும்பத்தினால் தம்பதியினருக்குத் தனிமையான சூழல் கிடைப்பதில் சிக்கல் இருந்தால், அவர்களுடைய பெற்றோரையும் அழைத்து ஆலோசனைகள் வழங்கப்படும். சரியான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளின் மூலம் பெரும்பாலானோருக்கு மூன்று முதல் ஆறு மாதங்களில் இந்தப் பிரச்சனை தீரும்.