Skip to main content

திருமணம் நடைபெறும் காலம்

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

காலம் கனிந்துவிட்டால் மணவாழ்க்கை தடையின்றி அமைந்து தாம்பத்ய வாழ்வில் இன்பத்தை உண்டாக்கும். என்னதான் முயற்சி செய்தாலும் சிலருக்கு காலம் கனியாது. ஆனால் சிலருக்கோ இளம்வயதிலேயே பல வரன்கள் தேடிவரும். காலாகாலத்தில் கால்கட்டு போட்டால் மட்டுமே மனம் பாதைமாறிப் போகாமலிருக்கும்.

குருபலம் வந்துவிட்டாலே திருமணம் நடைபெற்றுவிடும் என்ற கருத்து மக்களிடையே பொதுவாக நிலவி வருகிறது. குருபலம் என்பது கோட்சாரரீதியாக குரு ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய வீடுகளில் சஞ்சரிப்பதாகும். குருபலம் இருந்தாலும் திருமண வாழ்க்கை தகுந்த காலத்தில் அமைய கிரக நிலைகளும் சாதகமாக இருக்கவேண்டும்.

 

god



குரு வருடத்திற்கு ஒருமுறை இடப்பெயர்ச்சியாவதால், குருபலம் என்பது வருடாவருடம் மாறிமாறி வந்துகொண்டேயிருக்கும். ஒருவரின் ஜாதகத்தில் குருபலம் சிறப்பாக இருந்தாலும், திருமணத்திற்கான வயது வந்தாலும், நல்ல வரன்களும் தேடிவந்தாலும் அவரின் தசாபுக்திக் காலப்படி எப்பொழுது திருமணம் நடைபெற வேண்டுமென்றிருக்கிறதோ அப்பொழுதுதான் நடைபெறும். திருமணம் நடைபெறுபவர்களுக்கு மட்டுமின்றி, அதை நடத்தி வைப்பவர்களுக்கும் சுபகாரியம் செய்வதற்கான காலம் வரவேண்டும். இவையனைத்தும் ஒன்றுகூடினால் மட்டுமே திருமணம் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டாகும் என்றும் சாஸ்திர விதிகள் கூறுகின்றன.

ஜாதகத்திலுள்ள 7-ஆம் அதிபதியின் தசா புக்தி, 7-ல் அமைந்திருக்கும் கிரகத்தின் தசாபுக்தி, 7-ஆம் அதிபதியுடன் சேர்ந்திருக்கும் சுபகிரகங்களின் தசாபுக்தி, லக்னாதிபதியின் தசாபுக்தி, சுபகிரகங்களின் தசாபுக்தி, சந்திரனுக்கு 7-ல் அமையப்பெற்ற சுபகிரகங்களின் தசாபுக்தி, களத்திரகாரன் சுக்கிரனின் தசாபுக்தி, சுக்கிரனின் நட்சத்திரங்களாகிய பரணி, பூரம், பூராடத்தில் அமையப் பெற்ற கிரகங்களின் தசாபுக்தி போன்ற காலங்களில் திருமணம் நடைபெறும். மேற்கூறிய காலங்களில் கோட்சார ரீதியாக குருவும் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்களில் சஞ்சாரம் செய்யுமானால் திருமணம் எளிதில் கைகூடும்.

 

god



ஒருவருக்கு என்னதான் ஜாதக அமைப்புகள் சிறப்பாக இருந்தாலும், ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரா லக்னத்திற்கோ 2, 7-ல் சனி, ராகு- கேது போன்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று சுபர் பார்வையின்றி அமைந்து, அதன் தசாபுக்தி நடைபெற்றால் திருமணம் நடைபெற இடையூறு உண்டாகும்.

அதுபோல கேதுவின் தசை அல்லது புக்தி நடைபெறும் காலங்களில் திருமணம் எளிதில் கைகூடி வருவதில்லை. அப்படியே கைகூடினாலும் மணவாழ்வில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. கேது தசை நடைபெற்றால் அந்த ஜாதகருக்கு ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆரோக்கியரீதியாக உடல் அசதி, சோர்வு போன்றவை இருக்கும். தாம்பத்திய வாழ்வில் நாட்டம் குறைவாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக, வரனுக்கு சுக்கிர தசையோ, ராகு தசையோ நடைபெறுமானால் அவருக்கு தாம்பத்திய வாழ்வில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். கேது தசை நடைபெறுபவருக்கு அவரைத் திருமணம் செய்துவைத்தால் அவரின் தாம்பத்தியத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் மணவாழ்வில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிவு உண்டாகும்.

கேது தசை நடைபெறுபவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதென்றால், ஒன்று கேது தசை முடிந்தபிறகு செய்துவைக்க வேண்டும். அல்லது கேதுவின் ஆதிக்கம் கொண்ட ஜாதகமாகப் பார்த்துத் திருமணம் செய்தால் மணவாழ்க்கை பிரச்சினை இல்லாமல் இருக்கும். அதாவது கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலத்தில் பிறந்த வரனுக்கோ, கேதுவின் சாரம் பெற்ற கிரகங்களின் தசை நடப்பிலிருக்கும் வரனுக்கோ மணம் முடித்து வைத்தால் ஓரளவுக்கு இணங்கி வாழ்வார்கள்.

 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.