இந்தியா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் தூதர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
இந்தியா, ஜெர்மனி, ஹங்கேரி, செக் குடியரசு மற்றும் நார்வே ஆகிய ஐந்து நாடுகளில் உள்ள உக்ரைன் நாட்டுக்கான தூதர்களைப் பதவி நீக்கம் செய்வதாக உக்ரைன் நாட்டு அதிபரின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது. பணி நீக்கத்திற்கான காரணங்கள் குறித்தும், அவர்களுக்கு வேறு பணிகள் வழங்கப்படுமா என்ற தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
உக்ரைன் நாட்டிற்கு பொருளாதார மற்றும் ராணுவ ரீதியிலான உதவிகளை ஜெர்மனி வழங்கி வரும் நிலையில், அந்நாட்டிற்கான உக்ரைன் தூதர் திரும்பப் பெறப்பட்டிருப்பது என்பது குறிபிடத்தக்கது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் பல மாதங்களாக தொடர்ந்து வரும் நிலையில், பிரிட்டன் அரசு சார்பில் உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சி மற்றும் வெடிகுண்டுகளை கண்டறிவது போன்றவைக் குறித்த பயிற்சியைத் தொடர்ந்து அளித்து வருகிறது.