சீனாவின் பைட்டன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது டிக்டாக் செயலி. இது உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற பொழுதுபோக்கு செயலியாகும். அமெரிக்க மக்களின் தனி நபர் விபரங்களை சீனாவின் கம்யூனிஸ கட்சிகள் டிக்டாக் செயலி மூலம் உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனையடுத்து அமெரிக்காவின் பாதுகாப்பு நலன் கருதி டிக்டாக் செயலியை தடை விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அந்தத் தடையானது 45 நாட்களில் அமலுக்கு வரும் என்று இறுதிக்கெடு விதித்திருந்தார்.
மேலும் ட்ரம்ப், தடையைத் தவிர்க்க வேண்டுமென்றால் டிக்டாக் செயலியை ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் விற்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தார். ஏற்கனவே உலகின் இரண்டாவது பெரிய நாடான இந்தியாவில் விதிக்கப்பட்ட டிக்டாக் மீதான தடை, பைட்டன்ஸ் நிறுவனத்திற்கு கணிசமான அளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது. அதனால் பைட்டன்ஸ் நிறுவனம் வேறுவழியில்லாமல் இக்கோரிக்கையை ஏற்றது. அதன்படி அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிளுடன் இது குறித்தான பேச்சு வார்த்தை நடந்தது. இதில் மைக்ரோசாப்ட் உடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாங்கள் வைத்த முன்மொழிவை பைட்டன்ஸ் நிறுவனம் ஏற்கவில்லை. அதை அவர்கள் பரிசீலித்திருந்தால் அமெரிக்க நாடு மற்றும் அதன் பயனாளர்களுக்கு பாதுகாப்பானதாக இருந்திருக்கும்" எனக் கூறப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமையை ஆரக்கிள் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் டிக்டாக் செயலி அதன் மீதான தடையில் இருந்து தப்பியுள்ளது.