Skip to main content

டிக்டாக் மீதான அமெரிக்க அரசின் தடை, அமெரிக்க நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்... துறைசார் வல்லுநர்கள் கணிப்பு!!! 

Published on 12/09/2020 | Edited on 12/09/2020

 

Tiktok

 

டிக்டாக் மீதான அமெரிக்க அரசின் தடை ஆப்பிள், கூகுள் போன்ற சில அமெரிக்க நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனத் துறைசார் வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

 

சீனாவின் பைட்டன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது டிக்டாக் செயலி. உலக அளவில் சிறந்த பொழுதுபோக்கு செயலிகள் பட்டியலில் டிக்டாக் முக்கிய இடம் வகிக்கிறது. கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட இந்தியா சீனா மோதலையடுத்து இந்திய அரசு டிக்டாக் உள்ளிட்ட சில சீன செயலிகளுக்குத் தடை விதித்தது. இது போன்ற தடை அமெரிக்காவிலும் விதிக்கப்பட இருப்பதாகத் தகவல் பரவின. அதை உறுதி செய்யும் விதமாக ட்ரம்ப் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி தடை உத்தரவு பிறப்பித்தார். அந்தத் தடை அடுத்த 45 நாட்களில் அமலுக்கு வரும் என்றும் அறிவித்தார். ட்ரம்ப் விதித்த காலக்கெடு முடிவடைய இருப்பதால் டிக்டாக் விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இதுகுறித்து சில தினங்களுக்கு முன்னால் பேசிய ட்ரம்ப், தடைக்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது. ஒன்று டிக்டாக் தடை செய்யப்படும் அல்லது அதை ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் விற்கவேண்டும் என்றார். இதை டிக்டாக்கிற்கு கொடுக்கப்படும் மறைமுக நெருக்கடியாகவே பைட்டன்ஸ் நிறுவனமும், சீன அரசும் பார்க்கிறது.

 

இந்த நிலையில் அமெரிக்காவில் விதிக்கப்படும் டிக்டாக் தடையானது, அதனோடு வணிகத்தொடர்பில் உள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று துறைசார் வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஆப்பிள் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு விளம்பரங்கள் மற்றும் தரவுகள் பரிமாற்றம் மூலம் கிடைக்கும் வருவாய் இதன் மூலம் வெகுவாகப் பாதிக்கப்படும். இந்த வருவாய் இழப்பானது பல மில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்