நேற்று (13-05-203) மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர ‘மோக்கா’ புயலானது, வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (14-05-2023) காலை 08.30 மணி அளவில் வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 850 கிலோ மீட்டர் வடக்கு - வடமேற்கே நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மோகா புயல் வங்கதேசம் - மியான்மர் இடையே கரையைக் கடந்தது. 210 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மோக்கா புயலானது கரையைக் கடந்துள்ளது. இப்புயல் அடுத்த 3 மணி நேரத்தில் வலு இழந்து அதி தீவிரப் புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மோக்கா புயலின் விட்டம் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமானது என்பதால் புயலின் தாக்கம் வங்கதேசத்தின் பல பகுதிகளிலும் எதிரொலிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் கடந்த 20 ஆண்டுகளில் வங்கதேசத்தை தாக்கும் மிகுந்த சக்தி வாய்ந்த புயலாக மோக்கா புயல் இருக்கும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் முன்னதாகவே அறிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மோக்கா புயலானது சூறாவளி நிலச்சரிவை ஏற்படுத்தும் என்பதால் வங்கதேசம் மற்றும் மியான்மரில் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.