Skip to main content

இஸ்ரேல் போர்; மக்கள் கொல்லப்படுவதற்கு மோடி கண்டனம்

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

Modi condemns lost their of people Israel incident

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்கும் இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இதனிடையே, காசாவில் உள்ள அல்ஷிபா மருத்துவமனையில் ஹமாஸ் படையினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகின்றது. மேலும், இந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவத்தால் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

 

இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேலுக்கான தனது தூதரை திரும்பப் பெறுவதாக பஹ்ரைன் நாட்டு நாடாளுமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு வன்மையாக கண்டிக்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

இரண்டாவது உலகாளவிய தெற்கு உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் காணொளி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, “அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தது. நாங்கள் இந்த விஷயத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்திருக்கிறோம். போர் குறித்த பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெறும் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்