Skip to main content

விவசாயிகள் போராட்டம் குறித்து ஜஸ்டின் ட்ரூடோ கருத்து...

Published on 01/12/2020 | Edited on 01/12/2020

 

justin trudeau about delhi chalo rally

 

இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் கவலை அளிப்பதாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள 'டெல்லி சலோ' என்ற மாபெரும் பேரணி பல தடைகளைக் கடந்து டெல்லி சென்றடைந்தது. டெல்லியின் புராரி பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில், அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து ஆறாவது நாளாக விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசியுள்ள கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “விவசாயிகளின் போராட்டம் குறித்து இந்தியாவிலிருந்து வரும் செய்திகளைக் கவனித்தேன். நாங்கள் அனைவரும் அங்கிருக்கும் எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறோம். ஆனால், இதுதான் நிலவரம் என்ற உண்மை அனைவருக்கும் தெரியும். அமைதியான போராட்டக்காரர்களின் உரிமைகளைப் பாதுகாக்க கனடா எப்போதும் துணைநிற்கும் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். பேச்சுவார்த்தை மூலம் முடிவு காண்பதை நாங்கள் நம்புகிறோம். எங்கள் கவலைகளை எடுத்துரைக்கும் விதமாகப் பல வழிகளில் இந்திய அதிகாரிகளை அணுகியுள்ளோம். நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்