ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாகச் சீனா குற்றம்சாட்டியுள்ள விவகாரத்தில் சீனாவுக்கு நியூசிலாந்து பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் போரில் ஈடுபட்டபோது, அந்நாட்டில் ஆஸ்திரேலிய ராணுவம் சட்டத்துக்கு புறம்பான விதத்தில் 39 பேரை கொன்றது போர்க்குற்றம் என அறிவித்து ஆஸ்திரேலிய ராணுவம் விசாரணை நடத்திவருகிறது. இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆஸ்திரேலிய ராணுவ சீருடையில் இருக்கும் ஒருவர் குழந்தையின் கழுத்தில் ரத்தக்கறை படிந்த கத்தியை வைத்து இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, "ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் மற்றும் கைதிகளை ஆஸ்திரேலியா படையினர் கொலை செய்ததில் அதிர்ச்சியடைந்தோம். இது போன்ற செயல்களை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். அவர்களை விளக்கம் கூற அழைப்பு விடுக்கின்றோம்" எனத் தெரிவித்திருந்தார். ஏற்கனவே ஆஸ்திரேலியா, சீனா இடையேயான உறவில் கரோனா பாதிப்பு விரிசலை ஏற்படுத்தியிருந்த நிலையில், இப்புகைப்பட விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையானது.
இதனைத்தொடர்ந்து சீனாவின் இந்த செயலை கண்டித்திருந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், "பழிவாங்கும் எண்ணத்துடன் போலியான, மூர்க்கத்தனமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். இந்த போலி புகைப்படம் எங்கள் படைகள் மீது மோசமான கறையைப் படியச் செய்கிறது. இந்த தவறான பதிவுக்காகச் சீனா வெட்கப்பட வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் சீனா ஆஸ்திரேலியாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" எனக் கூறினார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் சீனாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், "இது உண்மைக்கு மாறான ஒரு படம். அது சரியாக இல்லை. இது போன்ற படங்கள் பயன்படுத்தப்படும்போது எங்கள் கொள்கை ரீதியான நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு நாங்கள் அந்த கவலைகளை எழுப்புவோம். கண்டனத்தைப் பதிவு செய்வோம். நாங்கள் அதை நேரடியாகச் செய்வோம்" எனக் கூறினார்.