ஈராக் நாட்டின் பிரதமராக உள்ள முஸ்தபா அல்-காதிமியின் வீட்டின் மீது இன்று ட்ரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி காயமின்றி உயிர் தப்பியுள்ளார். அதேநேரத்தில் பிரதமரின் பாதுகாவலர்கள் ஏழு பேர் இந்த ட்ரோன் தாக்குதலில் காயமடைந்துள்ளதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முஸ்தபா அல்-காதிமியை கொலை செய்யவே இந்த தாக்குதல் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ள ஈராக் ராணுவம், இந்த தோல்வியடைந்த முயற்சி தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் பாதுகாப்புப் படைகள் எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.
ஈராக் பிரதமரைக் குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. அதேநேரத்தில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஈரான் ஆதரவு குழுக்கள் பெரிய தோல்வியைச் சந்தித்தன. இதனையடுத்து அக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் தேர்தல் முடிவை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டம் ஒன்றில் வன்முறை வெடித்தது. இதில் ஈராக் பாதுகாப்புப் படையினர் மற்றும் ஈரான் ஆதரவு குழுவினர் என இருதரப்பும் துப்பாக்கியால் தாக்கிக் கொண்டனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்தார். ஈராக் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பலர் காயமடைந்தனர். இந்த சூழலில் பிரதமரைக் கொல்ல தாக்குதல் நடைபெற்றுள்ளதால், ஈரான் ஆதரவு ஷியா போராளிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.