உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்குள் இருக்கும் சோகம் அவரது இ-மெயில் உரையாடல் மூலமாக வெளிவந்துள்ளது.
ஜேம்ஸ் ரிலே என்பவரது மகன் பாரெட், மே 8, 2018 அன்று டெஸ்லா கார் விபத்தில் உயிரிழந்தார். இந்தநிலையில் ஜேம்ஸ் ரிலேவுக்கும், எலான் மஸ்க்கிற்கும் இடையேயான ஏழுவார கால இ-மெயில் உரையாடல் வெளியாகியுள்ளது. அந்த உரையாடலில் “என் முதல் மகன் என் கைகளிலேயே இறந்தான். அவனுடைய கடைசி இதயத் துடிப்பை உணர்ந்தேன்” என தனக்குள் இருக்கும் சோகத்தை பதிவு செய்துள்ளார். எலான் மஸ்க்கின் மகன் நெவாடா அலெக்சாண்டர் மஸ்க் 10 வார குழந்தையாக இருக்கும்போது உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இ-மெயில் உரையாடலில் ஜேம்ஸ் ரிலே விடுத்த வேண்டுகோளை ஏற்று எலான் மஸ்க், காரின் அதிகபட்ச வேகத்தை பெற்றோர்கள் கட்டுப்படுத்துவதை எளிதாக்கும் வகையில், காரின் கணினிமயமாக்கப்பட்ட அம்சத்தை மாற்றி அமைத்துள்ளார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
இந்த இ-மெயில் உரையாடலுக்கு இரண்டு வருடங்கள் கழித்து ஜேம்ஸ் ரிலே, தனது மகன் விபத்தினால் சாகவில்லையெனவும், லித்தியம்-அயன் பேட்டரிகள் வெடித்ததால் எற்பட்ட தீயினாலயே உயிரிழந்ததாகக் கூறி டெஸ்லா நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு புளோரிடா ஃபெடரல் நீதிமன்றத்திற்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.