அண்மைக் காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.
அண்மையில் ஓடும் ரயிலுக்கு பக்கவாட்டில் நடந்து செல்வது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்ட இளைஞர் ஒருவர் ரயில் மோதி தூக்கி வீசப்படும் வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது. இதற்கு முன்பே காவல் நிலையங்கள் முன்பு ஆயுதங்களை கையில் வைத்தபடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் திருச்சியில் 'நான் தான் தல' என கூறியபடி நாட்டு வெடிகுண்டை பாழடைந்த வீட்டின் மீது வீசி எறிந்து அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியைச் சேர்ந்தவர் மன்னாரு என்கின்ற மணிகண்டன். இவர் கையில் பட்டாகத்தி உடன் நின்றுகொண்டு சேதமடைந்த வீட்டின் சுவற்றின் மீது நாட்டு வெடிகுண்டை வீசி, அதை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், திருச்சி பெட்டவாய்த்தலை காவல் நிலைய போலீசார் இளைஞர் மணிகண்டனை கைது செய்துள்ளனர்.