Skip to main content

தாலியை பறித்து விரட்டிய கொடுமை; அவமானம் தாங்காமல் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

the young woman took a tragic decision for taking away the thali in virudhunagar

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி (20). இவர் பிளஸ் 2 வகுப்பு படித்த போது தென்காசி மாவட்டம் தேவிப்பட்டினத்தை சேர்ந்த சசிகுமார் (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு, தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சசிகுமார், மாரீஸ்வரியை அழைத்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். மேலும், அங்குள்ள ஒரு கோவிலில் முன், சசிகுமார் மாரீஸ்வரிக்கு தாலி கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

இதையடுத்து, கொடைக்கானலில் இருந்து திரும்பிய இருவரும் தென்காசி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அதனை தொடர்ந்து, சசிகுமார் தனது சித்தி முனியம்மாள் வீட்டில் மாரீஸ்வரியை விட்டுவிட்டு, அவர் மட்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், கொடைக்கானலில் திருமணம் செய்து கொண்ட விபரத்தை சசிகுமார் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால், அவர்கள் சசிகுமாரின் காதல் திருமணத்தை ஏற்கவில்லை.  உடனடியாக சசிகுமார் குடும்பத்தினர், முனியம்மாளை தொடர்பு கொண்டு மாரீஸ்வரியை வீட்டை விட்டு வெளியே அனுப்புமாறு கூறியுள்ளனர். 

 

அதனை கேட்ட முனியம்மாள், மாரீஸ்வரியை மிரட்டி அவரது கழுத்தில் உள்ள தாலியை பறித்து வீசியதுடன் வெளியே தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாரீஸ்வரி சோழபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், அவமானம் தாங்காமல் பூச்சிமருந்தை குடித்துள்ளார். இதை அறிந்த மாரீஸ்வரியின் உறவினர்கள், மாரீஸ்வரியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இதையறிந்த தளவாய்புரம் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், அந்த பெண்ணை மிரட்டி தாலியை அறுத்து வீசி அவமானப்படுத்தியது முனியம்மாள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, முனியம்மாள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் கண்கள் தானம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Eye donation of a policeman who passed away in a two-wheeler accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 28  ஆம் தேதி இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணாமலையும் மற்றும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை 29 ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

Next Story

நிர்மலா தேவி வழக்கு; தண்டனை விவரம் இன்று அறிவிப்பு!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Nirmala Devi case; Punishment details announced today

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அப்போது சிபிசிஐடி எஸ்.பி.யாக இருந்த ராஜேஸ்வரி தலைமையில் 9 தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். நிர்மலாதேவி உள்ளிட்ட மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்த விவகாரம் குறித்து அன்றைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். சந்தானமும் விசாரணை நடத்தினார். அதே சமயம் இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்தியது. இதற்கிடையே பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் (DYFI) மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் தொடர்ந்த வழக்கில், ‘உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மாணவிகள், புகாரளிக்கும் விசாகா கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை? ஆறு ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று காமராஜர் பல்கலைக்கழகத்திடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ‘ஜூன் 7ஆம் தேதிக்குள் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி விளக்கமளிக்க வேண்டும்.’ என்றும் உத்தரவிட்டது. தமிழக அரசுத் தரப்பில்  ‘நிர்மலா தேவி வழக்கில் கீழமை நீதிமன்றம் ஏப்ரல் 26 ஆம் தேதி தீர்ப்பளிக்கவுள்ளது’எனத் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தீர்ப்பு நாளான கடந்த 26 ஆம் தேதி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ஆனால் அன்றைய தினம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அப்போது, ‘உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை’ என்று அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். அன்றைய தினம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார். 

Nirmala Devi case; Punishment details announced today

இதனையடுத்து இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் நேற்று (29.04.2024) தீர்ப்பு வழங்கியது. இதற்காக நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2ஆவது மற்றும் 3ஆவது நபர்களான முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபரான பேராசிரியை நிர்மலா தேவியை குற்றவாளி என அறிவித்து அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போது தீர்ப்பின் விவரங்களை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் வாதிட்டார். அதற்கு பிற்பகல் 2.30 மணிக்கு மேல் தீர்ப்பு குறித்து அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். இருப்பினும் தீர்ப்பின் விவரம் நேற்று அறிவிக்கப்படவிலை. இந்நிலையில் நிர்மலா தேவிக்கான தண்டனை விவரங்கள் இன்று (30.04.2024) அறிவிக்கப்பட உள்ளது.