Skip to main content

117 ஏக்கர்; 4 மணி நேரம்; 6.40 லட்சம் மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை!

Published on 24/12/2022 | Edited on 24/12/2022

 

world record in tree plantation program in dindigul

 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள இடையகோட்டையில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறைக்கு சொந்தமான 117 ஏக்கர் நிலத்தில் 4 மணி நேரத்தில் 6 லட்சத்து நாற்பதாயிரம் மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை படைத்துள்ளனர். இந்த உலக சாதனை நிகழ்வு எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (USA), ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட உலக சாதனை நிறுவனங்களால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கும் விழா இடையகோட்டையில் நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.

 

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். பின்னர் விழாவில் பேசும்போது, "கலைஞர் மரங்களை வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும் என்று கூறினார். அந்த வகையில் அவருடைய ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள குளங்கள், நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தூர்வாரும் பணிகள் மட்டுமின்றி, நீர் நிலைகளைச் சுற்றி மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டன. அந்த மரக்கன்றுகள் தற்போது வளர்ந்து சோலையாக காட்சியளிப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர்  தமிழகத்தில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க முக்கியத்துவம் அளித்து அதற்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டு அந்தப் பணிகளை ஊக்கப்படுத்தி வருகிறார்கள். ஒரே இடத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நடவு செய்து வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மேம்பாடு அடையும். மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

 

காலநிலை மாற்றம் தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்த 2021-22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளிலும் பசுமை இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 4 மணி நேரத்தில் 6.40 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்து உலக சாதனை நிகழ்த்தியிருப்பது பொதுமக்களின் ஆர்வத்தையும் முயற்சியையும் காட்டுகிறது. நான் மீண்டும் இந்தப் பகுதிக்கு வரும்போது இந்த மரக்கன்றுகளின் வளர்ச்சியைப் பார்வையிடுவேன். இந்த மாபெரும் சாதனை நிகழ்வை நிகழ்த்திய அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

 

விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசிய போது, "6 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை 16 ஆயிரம் நபர்களை ஒரு சேர ஒரு இடத்திற்கு கொண்டு வந்து 4 மணி நேரத்தில் நட்ட சாதனையில் திண்டுக்கல் மாவட்டம் முதல் நிலையில் இருப்பதை நினைக்கின்ற போது நமக்கு பெருமையாக இருக்கிறது. ஒரு தாய் தனது குழந்தையை 10 மாதம் கருவில் வைத்து சுமக்கின்றார்கள். அதேபோல் இந்த திட்டத்தை மனதில் நினைத்து எத்தனை நாட்கள், வருடங்கள் இதைக் குறித்து யோசித்து இப்பணி சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது. முயற்சி திருவினையாக்கும் என்பார்கள். முயற்சி செய்தால் கட்டாயம் நிறைவேற்ற முடியாதது என்பது வாழ்க்கையில் இல்லை. அதை அமைச்சர் சக்கரபாணி நிறைவேற்றி இருக்கிறார். அதை பாராட்டுகிறேன். அதுபோல் குருவை மிஞ்சிய சிஷ்யனாகவும் சக்கரபாணி இருந்து வருகிறார். உழைப்பாளியாகச் செயல்பட்டு வரும் தமிழக முதல்வர் வழியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேபோல் உணவு  அமைச்சர் சக்கரபாணி இந்த தொகுதியை பசுமை நிறைந்த தொகுதியாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்" என்று கூறினார்.

 

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “தமிழக முதல்வர் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் கடந்த 80 நாட்களாக இரவு பகல் பாராமல் அதிகமான முயற்சி செய்து மரக்கன்றுகள் நடும் பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்தியாவில் இதுவரை 4 மணி நேரத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை 16 ஆயிரம் நபர்களை ஒரு சேர ஒரு இடத்திற்கு கொண்டு வந்து மரக்கன்றுகளை நட்டு சாதனை புரிந்துள்ளோம். இந்த சாதனை நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

 

இப்பகுதியில் சீமை கருவேல மரங்கள் இருந்தன. அவை முற்றிலும் அகற்றப்பட்டு, இப்பகுதி பசுமையான பூமியாக மாற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் தமிழகத்தில் வனபரப்பை 33 சதவீதம் உயர்த்த வேண்டும் என முடிவெடுத்ததன் விளைவாக 10 ஆண்டுக் காலத்தில் தமிழகம் இந்தியாவில் தலைசிறந்த பசுமை மாநிலமாக உருவாக்கும் முனைப்போடு தற்போது 8 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. கடந்த 10 மாத ஆட்சியில் பல்வேறு சாதனைகளை நிறைவேற்றி பொற்கால ஆட்சியை முதலமைச்சர் நடத்திக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.

 

world record in tree plantation program in dindigul

 

உலக சாதனைக்கான சான்றிதழை விழாவில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோரிடம் வழங்கினார்கள். இந்த விழாவில் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் அதுல்ய மிஸ்ரா,  நில நிர்வாக ஆணையர் மற்றும் அரசு சிறப்புச் செயலர் நாகராஜன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் திட்ட இயக்குநர்-பசுமை தமிழ்நாடு திட்டம் தீபக் ஸ்ரீவத்ஸவா, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார். வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியில் இந்த ஆறு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இரவு பகல் பாராமல் உழைத்தவர்களுக்கு அமைச்சர் உதயநிதி நினைவுப்பரிசு வழங்கினார். அதைத் தொடர்ந்து அமைச்சர் சக்கரபாணியும் உதயநிதி ஸ்டாலினுக்கு செங்கோல் பரிசு வழங்கினார்.

 

 

சார்ந்த செய்திகள்