Skip to main content

புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு; பெண்கள் சாலை மறியல் போராட்டம் 

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Women struggle against new Tasmac store near Gudiyatham
கோப்புப்படம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த  மேல் ஆளத்தூர் சாலையில் வைரம் நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு நடந்துள்ளது. இதற்காக மினி லோடு ஆட்டோவில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு கடையில் இறக்குவதற்காக டாஸ்மாக் கடை ஊழியர்கள் வந்துள்ளனர். அப்பொழுது அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் ஏற்கெனவே இந்தப் பகுதியில் மதுபான கடை செயல்பட்டு வருவதாகவும் இதனால் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாகவும், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து குடியாத்தம் மேல் ஆளத்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், சரக்கு பாட்டில்களை இறக்க வந்த லோடு ஆட்டோவையும் பொதுமக்கள் திருப்பி அனுப்பினர். இதன் காரணமாக வைரம் நகர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர் சமூகப் பொறுப்பு இல்லாமல் இப்படிப் பேசுவது நியாயமல்ல” - அன்புமணி ராமதாஸ்

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Anbumani Ramadoss says It is not fair for a senior minister like Duraimurugan to talk like this

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது அரசின் இயலாமையைக் காட்டுகிறது என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டு வருவதற்கான சூழல் இல்லை. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியும், உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவை, டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் கூறியிருக்கின்றனர். அமைச்சர்களின் கருத்துகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக அரசின் தோல்வியையும், இயலாமையையுமே அமைச்சரின்  கருத்துகள் காட்டுகின்றன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான சூழல் இல்லை என்று கூறியிருக்கிறார். அதன் பொருள் என்னவென்று தெரியவில்லை. மதுவிலக்கை நடைமுறைப்படுத்த எந்த சூழலும் தேவையில்லை. நாட்டு மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதுமானது. அந்த எண்ணம் இருந்தால் ஒரே ஆணையில் மதுவிலக்கை அறிவித்து, நாளை முதல் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியும். ஆனால், மது ஆலை அதிபர்களின் ஆதரவைப் பெற்ற தி.மு.க அரசுக்கு அந்த எண்ணம் இல்லை என்று தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடினால் அண்டை மாநிலங்களில் இருந்து மது உள்ளே வந்து விடும், கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற புளித்துப் போன காரணங்களைக் கூறியே மதுவிலக்கை தள்ளிப்போடக் கூடாது. தமிழ்நாட்டில் சுமார் ஐந்தாயிரம் மதுக்கடைகள் இருக்கும்போதே மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. இது அரசின் தோல்வியே தவிர, இதற்கு வேறு காரணங்கள் இல்லை. 

அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் இருந்தாலும் அங்கிருந்து தமிழ்நாட்டிற்குள் மது வராமல் தடுக்க வேண்டியதும், கள்ளச்சாராய வணிகத்தைத் தடுக்க வேண்டியதும் அரசின் அடிப்படைக் கடமைகள். அதற்காகத் தான் காவல்துறை என்ற அமைப்பும், அதில் மதுவிலக்குப் பிரிவு என்ற துணை அமைப்பும் உள்ளன. தமிழகத்தின் எந்த மூலை முடுக்கில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டாலும் அது குறித்து அடுத்த 5 நிமிடங்களுக்குள் அரசுக்கு தகவல் கிடைக்கும் வகையில் காவலர்கள், கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் என  வலிமையான கட்டமைப்பு அரசிடம் உள்ளது. இவ்வளவையும் வைத்துக் கொண்டு அண்டை மாநிலங்களில் இருந்து மது வருவதையும், கள்ளச்சாராயத்தையும் தடுக்க முடியாவிட்டால் அது அரசின் இயலாமை தான். மது விலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும்.

அரசு அதன் வருவாய்க்காகவும், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் நடத்தும் மது ஆலைகள் செழிக்க வேண்டும் என்பதற்காகவும் மதுக்கடைகளைத் தெருவுக்குத் தெரு திறந்து விட்டு, உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவை என்று உழைக்கும் மக்களின் மீது பழியைச் சுமத்துவது கண்டிக்கத்தக்கது. அதிலும் துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களே சற்றும் சமூகப் பொறுப்பு இல்லாமல் இப்படி பேசுவது நியாயமல்ல. மதுவால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இரு லட்சம் பேர் உயிரிழப்பதை விட சிறிது நேரம் அசதியாக இருப்பது எவ்வளவோ மேல். எனவே, தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

‘மது இறக்குமதியில் ஊழல் நடந்திருக்கிறது’ - சிஏஜி அறிக்கை

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
 CAG Report as Corruption in Liquor Import

டாஸ்மாக் மது இறக்குமதி செய்ததில் ஊழல் நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. 

சட்டப்பேரவையில் வைக்கப்பட்ட 2021-2022ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான அறிக்கை குறித்து சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. சிஏஜி அறிக்கை தொடர்பாக முதன்மை தலைமை கணக்காயர் ஜெய்சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், ‘ஒரே நபர் தொடர்ச்சியாக ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டதால் மதுபான இறக்குமதியில் ஊழல் நடந்திருக்கிறது. டாஸ்மாக் மதுபான விலை உயர்த்தப்பட்டாலும் அதற்கேற்ற வரி அரசுக்கு செலுத்தப்படவில்லை. அரசுக்கு வரி செலுத்தாததால் ரூ.30.50 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், கொரோனா காலக்கட்டத்தில் தகுதி இல்லாதவர்களுக்கு ரூ.5.78 கோடி கோவிட் பண உதவி செய்யப்பட்டிருக்கிறது. 

இதில் 27,943 தகுதி இல்லாதவர்களுக்கு கோவிட் பண உதவி கிடைத்திருக்கிறது என்று சிஏஜி அறிக்கையில் தகவல் வெளியாகியிருக்கிறது. வரித் தாக்கல் செய்யாதவர்கள் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், தணிக்கை காலத்தில் வரித்தாக்கல் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.