Skip to main content

பட்டாசு ஆலை விபத்தில் பெண் உயிரிழப்பு; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

Woman loss their live in firecracker factory accident; Chief Minister announced Rs 3 lakh relief

 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பல பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில் சில இடங்களில் விபத்துகள் ஏற்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் சாத்தூரில் மீண்டும் பட்டாசு ஆலை ஒன்றில் விபத்து ஏற்பட்டுள்ளது.

 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள குள்ளகவுண்டம்பட்டி கிராமத்தில் ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த கேசவன் என்பவருக்கு சொந்தமான 'தி இந்தியன் நேஷனல்' பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 60க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று வழக்கம்போல் பணியில் ஈடுபடும் பொழுது மதிய வேளையில் வெப்ப உயர்வு காரணமாக கெமிக்கல் அறையில் பட்டாசு விபத்து ஏற்பட்டது.

 

இதில் 2 அறைகள் தரைமட்டமானது. இதன் இடிபாடுகளில் சிக்கி மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா (24) என்ற இளம்பெண் உயிரிழந்துள்ளார் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சம்பவ இடத்திற்கு வந்துள்ள தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து யாரேனும் இடிபாடுகளில் சிக்கி உள்ளனரா என்பது குறித்து தீயணைப்புத் துறையினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜெயசித்ராவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்