தமிழகத்தில் போலி பத்திரங்கள் பதிவு செய்வது தொடர்பாக பல புகார்கள் எழுந்த நிலையில், உளவுத்துறை மூலம் அவற்றை கண்காணிக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி. தலைமையிலான குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, திருச்சி லால்குடியைச் சேர்ந்த குமார் என்பவர் போலி முத்திரைத்தாள்கள், போலி அரசாங்க முத்திரைகள், போலி அரசு ஸ்டாம்ப் போன்றவற்றை வைத்திருந்ததாகத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவரை கைது செய்து கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தியதில் திருச்சியை சேர்ந்த திமுக பிரமுகரும், பிரபல ரியல் எஸ்டேட் அதிபரும், பிரபல இசையமைப்பாளரின் பெயரைக் கொண்டவரும், லால்குடி பத்திர எழுத்தாளர் இருவர் பெயரும் போலீஸ் டீமிற்கு தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், குமார் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீஸ் அவர்களை விசாரிக்க தீர்மானித்த போது, சமயபுரம் காவல்நிலையத்தில் வேலை பார்க்கும் மறைந்த உயரமான வில்லன் நடிகர் பெயரைக் கொண்ட ஒருவர் ரகசியத் தகவல் அளித்ததால் வெளியூருக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது காவல்துறையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே லால்குடி, மண்ணச்சநல்லூர் சார்பதிவாளர் அலுவலகங்களில் தான் அதிகளவில் போலி பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு முக்கியக் காரணம் ஒருசில சார்பதிவாளர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வருவதுதான் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2010ல் இருந்து இன்று வரை லால்குடி, மண்ணச்சநல்லூர் சார்பதிவாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்படாமல் ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர். அதேபோல் இந்த போலி பத்திரங்கள் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வராமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 13 வருடகாலமாக பலகோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை லால்குடி, சமயபுரம் பகுதிகளைச் சேர்நத 2 புரோக்கர்கள் தங்களுடைய பெயரில் பதிவு செய்து ஒரு 6 மாதகாலத்திற்குப் பிறகு அந்த திமுகவைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் அதிபரின் பெயருக்கு மாற்றிக் கொடுத்துவிடுவார்கள். இப்படி பல இடங்கள் போலி பத்திரங்கள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால் நாளை பெரும்பாலான இடங்களை இந்த கும்பல் போலி பத்திரங்கள், போலி அரசு முத்திரைகளைக் கொண்டு அபகரிக்கும் நிலை ஏற்படும். இவர்களுக்கு எதிராக புகார் கொடுக்க முன்வர வேண்டிய வருவாய்த்துறையும் அவர்களுக்கு உடந்தையாக இருப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர். அதேபோல் இவர்களுக்கு உடந்தையாக இருக்கும் காவலர் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த போலி பத்திரப் பதிவுகளைக் களைய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.