Skip to main content

கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டது ஏன்? -உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பின் முழுப் பின்னணி!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020
Why was Kausalya's father Chinnasamy released? The full background of Udupi Shankar  case verdict!

 

உடுமலை சங்கர் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்தும், ஜெகதீஷ் உள்ளிட்ட ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், தன்ராஜ் என்பவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும், மணிகண்டன் என்பவருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையையும் ரத்து செய்து தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை மற்றும் பிரசன்னா ஆகியோரின் விடுதலையையும் உறுதி செய்துள்ளது.

தீர்ப்பின் சாராம்சம் இதோ -

இந்த வழக்கில் ஏராளமான சாட்சியங்களையும், ஆதாரங்களையும் அரசுத்தரப்பு காட்டிய போதும், சின்னசாமி மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டது. குற்றச்சதி  குற்றச்சாட்டைப் பொறுத்தவரை, சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையிலேயே நிரூபிக்க முடியும். ஆனால், அரசுத்தரப்பு இந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளை கோர்வையாக நிரூபிக்கத் தவறி விட்டது.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனையும், மதனையும் உடுமலைப்பேட்டையில் உள்ள லாட்ஜில் சின்னசாமி தங்க வைத்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. பழனி பூங்காவில் சின்னசாமியை மூன்று பேர் சந்தித்துப் பேசியதாகக் கூறும் குற்றச்சாட்டு,  சந்தேகத்திற்கு இடமானதாக உள்ளது. இதுசம்பந்தமாக சாட்சியளித்தவர்களுக்கு,  சின்னசாமியைத் தவிர வேறு எவரையும் தெரியாது. குற்றம் சாட்டப்பட்ட ஜெகதீசன் மற்றும் மணிகண்டனை கைது செய்த முக்கிய சாட்சியான உடுமலைப்பேட்டை காவல் ஆய்வாளர் வெங்கட்ராமனை விசாரிக்கவில்லை. காவல் ஆய்வாளரான அவர், சம்பவம் குறித்து தகவல் அறிந்தும், உடனடியாக புகார் தெரிவிக்கவில்லை.

சங்கரைக் கொல்வதற்காக, ஏடிஎம்–மில் இருந்து சின்னசாமி பணம் எடுத்து ஜெகதீசனிடமும், செல்வகுமாரிடமும் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் நிரூபிக்க அரசுத்தரப்பு தவறிவிட்டது. அதனால், அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் சின்னசாமி விடுதலை செய்யப்படுகிறார் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

 

Why was Kausalya's father Chinnasamy released? The full background of Udupi Shankar  case verdict!

 

இந்த வழக்கில்,  முதல் சாட்சியான கவுசல்யா, தனது குறுக்கு விசாரணையின்போது, ஆறு பேர் தன்னையும், தன் கணவர் சங்கரையும் தாக்கியதாகக் கூறினார். ஆனால், அவரால் ஐந்து பேரை மட்டுமே அடையாளம் காட்ட முடிந்தது. கொலையாளிகள் பயன்படுத்திய ஆயுதங்களைப் பற்றியும் அவரால் கூற முடியவில்லை.

இந்த வழக்கின் சாட்சியங்களில் இருந்து, விசாரணையின் ஆரம்ப கட்டத்திலேயே, அதாவது முதல் தகவல் அறிக்கை பதிவிலேயே,  சில குறைபாடுகள் இருந்துள்ளன. ஒரு குற்றம் நடைபெற 90 வினாடிகள் ஆகலாம்.  இந்த நேரம், நேரடி சாட்சியால் எளிதில் மறக்க முடியாதது. முழு நினைவுடன் இருந்த அவர், பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவத்தை அவர் நிச்சயமாக நினைவில் வைத்திருக்க முடியும். முதலில் ஆறு பேர் தாக்கினார்கள் எனக் கூறிய கவுசல்யா, பின்னர் ஐந்து பேர் என மாற்றிக் கூறியுள்ளார். நிமிடத்திற்கு நிமிடம் நடந்ததாக,  விவரங்களைக் கூறும் போதே, அரசுத்தரப்பு சொல்லிக் கொடுத்ததை, சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையைப் போல சொல்லியிருக்கிறார் என்ற சந்தேகமே எழும்.

நேரில் பார்த்த சாட்சியின் சாட்சியம்,  கோர்வையாகவும், நம்பகத்தன்மையுடனும் இருந்தால், அதுவே தண்டனை விதிக்க போதுமானதாக இருக்கும். சின்னசாமி, மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் மொபைலில் பேசியுள்ளார் என்பதைத் தவிர, குற்றச்சதியில் அவரை சம்பந்தப்படுத்த வேறு எந்த ஆதாரங்களும் இல்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்படுகிறார்.

அதேசமயம், சங்கர் மீதான தாக்குதலின்போது, காயமடைந்தவர்கள் அளித்த சாட்சியத்தை நிராகரிக்க எந்த காரணமும் இல்லை. இந்த வகையில், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய ஐந்து பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை,  அரசுத்தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது. ஆனால் அவர்கள் குற்றச்சதியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதேசமயம், கொலை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் கூறப்படும் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன.

திட்டமிட்டு, இரக்கமற்ற முறையில் கொலை செய்வது, அப்பாவி குழந்தைகள், ஆயுதங்களற்ற நபர்கள், பெண்கள் மற்றும் முதியோர்கள், கொடூரமான முறையில் கொல்லப்பட்டால், அந்த வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கலாம். கொடூர குற்றவாளிகள் மனம் திருந்த, சீர்திருத்திக் கொள்ள வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட நபர்களை விடுவித்தால் அது சமூகத்திற்கு அச்சுறுத்தலானது.

இந்த வழக்கில்,  ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய ஐந்து பேரும் இளம் வயதினர். இதற்குமுன் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபட்டதில்லை. இவர்கள்,  தங்களைத் திருத்திக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது என்பதால், இவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை,  ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது.

அதேபோல, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தன்ராஜ் மீதான குற்றச்சாட்டுகளும், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. ஐந்து ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட பிரசன்னா மீதான குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை.

வழக்கின் சாட்சிகள், ஆதாரங்களில் இருந்து, கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமிக்கு பழிவாங்கும் எண்ணம் இருந்தது என்பது நிரூபிக்கப்படவில்லை. திருப்பூர் நீதிமன்ற தீர்ப்பில் தலையிட எந்த காரணமும் இல்லை. அதேபோல, அவரது மாமா பாண்டிதுரை உள்பட இருவரின் விடுதலையிலும் தலையிட எந்தக் காரணமும் இல்லை. இவர்கள் மூன்று பேரின் விடுதலையை எதிர்த்த மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சின்னசாமி, தன்ராஜ், மணிகண்டன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளதால், உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கவேண்டும். ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய ஐந்து பேரும் ஏற்கனவே அனுபவித்த தண்டனையை கழித்துக் கொள்ள வேண்டும் எனவும்  நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
 

சார்ந்த செய்திகள்