Skip to main content

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கடன் வசூலிப்பதற்கு தடை ஏன்? -மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

Published on 08/07/2020 | Edited on 08/07/2020
 Why are collecting credit prohibited from corporate companies ?

 

கரோனா காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக, கடன் வசூல் மற்றும் திவால் நடவடிக்கை தொடர்பாக, எந்த வழக்கும் தாக்கல் செய்யக்கூடாது என மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனுவுக்கு, மத்திய அரசு 6 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் கடன்களை வசூலிப்பதற்காக, கடந்த 2016-ம் ஆண்டு, திவால் மற்றும் கடன் மோசடி சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சட்ட திருத்தங்கள், கடன் வசூல் நடவடிக்கைகளுக்காக, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் வழக்குகள் தொடர வழிவகை செய்கின்றன.

கரோனா தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கரோனா காலத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக கடன் வசூல் மற்றும் திவால் நடவடிக்கை தொடர்பாக எந்த வழக்கும் தாக்கல் செய்யக்கூடாது என மத்திய அரசு, அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்தை செல்லாது என அறிவித்து, அதை ரத்து செய்யக்கோரி சென்னையை சேர்ந்த ககன் போத்ரா என்பவர்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், மத்திய அரசின் இந்த அவசர சட்டம், திவால் மற்றும் கடன் மோசடி சட்ட விதிகளுக்கு எதிரானது எனவும், கடன் வசூல் தொடர்பான நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர முழுமையாக தடை விதிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சங்கரநாராயணன் ஆஜராகி, மனுதாரர் ஒரு பைனான்சியர் என்றும், தனிப்பட்ட காரணாங்களுக்காக பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், உரிமையியல் வழக்காகத் தொடரலாம் என்றும், அந்த உரிமை பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக, மத்திய அரசின் கருத்துகளை பெற்று தெரிவிப்பதாக, அவகாசம் கோரினார். இதை ஏற்ற நீதிபதிகள், மனுவுக்கு ஆறு வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.அ

சார்ந்த செய்திகள்