Skip to main content

கரோனா தொற்றால் மாணவர்கள் உயிருக்கு ஆபத்தென்றால் பொறுப்பேற்பது யார்? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020
Who is responsible if students are at risk of coronary artery disease? - High Court Question!

 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளிவைக்க முடியுமா என்பது குறித்து தமிழக அரசும், கரோனா தொற்று தீவிரமடைவதால் தேர்வை தள்ளிவைப்பது அவசியமா எனப் பெற்றோரும் பரிசீலிக்கும்படி,  சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து,  தேர்வு தொடர்பான வழக்கை ஜூன் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.


கரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்புத் தேர்வுகள்,  ஜூன் 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தொற்று பரவல் குறையாததால், தேர்வுகளை தள்ளிவைக்கக்கோரி ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளில் அரசு பதிலளிக்க உத்தரவிட்டு,  ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு மாதங்களுக்கு தேர்வை தள்ளிவைக்கவும், மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு அவசியம் எனவும் கோரி,  தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் பக்தவச்சலம் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ‘தனிமனித விலகலைப் பின்பற்றி, 12 ஆயிரத்து 690 மையங்களில் 9.79 லட்சம் மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாணவர்களுக்காக சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மார்ச் மாதம் நடத்த வேண்டிய தேர்வு. ஏற்கனவே இரண்டு மாதங்கள் தாமதமாகி விட்டது.  முடிவில்லாமல் தேர்வை தள்ளிவைக்க முடியுமா?  என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளவில்லை.  15 நாட்கள் புத்தாக்க பயிற்சி வழங்க வேண்டும். அதன்பின் தேர்வு நடத்த வேண்டும்.  மத்திய அரசு ஜூலை மாதம் தான் தேர்வு நடத்துகிறது. பள்ளி, கல்லூரிகள் செயல்பட தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 30 சதவீத மாணவர்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து எழுத உள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி கரோனாவை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன, தேர்வு எழுத வரும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன,  ஏற்கனவே இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் ஜூன் 11-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன எனக்கூறி, இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்கவேண்டும் என்றும்,  அந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார்.

 

 


அதற்கு நீதிபதிகள், 9 லட்சம் மாணவர்களின் உயிர் மீது ரிஸ்க் எடுக்கக்கூடாது. மாணவர்கள் வந்து செல்வதில் உள்ள பிரச்சினைகளை புரிந்து கொள்ள வேண்டும்.  தேர்வை ஏன் தள்ளிவைக்கக்கூடாது?  ஜூலையில்தான் பள்ளிகள் திறப்பதை ஆலோசிக்க வேண்டுமென மத்திய அரசு வழிகாட்டியுள்ள நிலையில், ஜூனுக்குள் ஏன் அவசரம் காட்டப்படுகிறது என அரசுத்தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.

மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் அதிகரித்து வருகிறது. 9 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்களை, தேவையில்லாமல் சிரமத்துக்கு உள்ளாக்கக் கூடாது,  தேர்வை ஜூலை மாதத்துக்கு நடத்தலாமே? சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்த பிறகே பள்ளி - கல்லூரிகளைத் திறக்க வேண்டும் என மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை மீறுவீர்களா? எதிர்கால தூண்களான மாணவர்களி்ன் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசுத் தரப்பில் பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் மாதம்தான் திறக்கப்படுகின்றன. தேர்வு நடத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தேர்வுகள் முடிக்கப்பட்டுவிட்டது. மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், மாணவர்களின் உயிரைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கை பார்ப்பதாகத் தெரிவித்தனர். மேலும், தேர்வு தள்ளிவைப்பது தொடர்பாக தமிழக முதல்வருடன், பள்ளி, கல்வித் துறை அமைச்சர் விவாதித்து வருவதாக செய்திகள் வருகின்றன. இந்த விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்து ஏன் தெரிவிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.

முதல்வர், அமைச்சர்கள் விவாதம் நடந்து வருவதால் வழக்கை நாளைக்கு தள்ளிவைக்க வேண்டும் என அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தீவிரமான விஷயம்,  ஜூன் 15 -ம் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது. 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது.  கரோனா தொற்று பரவல் குறைந்த பின் தேர்வு நடத்தலாம்.  ஊரடங்கில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பது போல் அல்ல பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவது.  தேர்வைத்  தள்ளிவைக்கும் முடிவை அரசே எடுத்தால் நல்லதாக இருக்கும் எனத் தெரிவித்த நீதிபதிகள்,  ஜூலை 2-வது வாரத்தில் தேர்வு நடத்தலாமா என்பதை 2:30 மணிக்கு தெரிவிக்கும்படி, அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

அதன்படி பிற்பகல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், எதிர்வரும் நாட்களில் தமிழகத்தில் 2 லட்சம் பேர் வரை கரோனா தொற்றுக்கு ஆளாக நேரிடும் என மருத்துவ நிபுணர்கள் அறிக்கை அளித்துள்ளனர். அதனால், பத்தாம் வகுப்பு தேர்வை நடத்துவதற்கு இதுவே சரியான தருணம் என்பதால் தேர்வுக்கு தடை விதிக்கக்கூடாது.  அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என வாதிட்டார்.

 

nakkheeran app




ஊரடங்கை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில் மாநில அரசு தேர்வு நடத்த முடியுமா என அரசு தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அரசு தலைமை வழக்கறிஞர், பத்தாம் வகுப்பு தேர்வுகளை தள்ளிவைக்கக்கோரி ஏற்கனவே தொடரப்பட்ட 11 வழக்குகளும் ஜூன் 11-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன. முக்கியமான இந்தத் தேர்வை, மற்ற 11 மாநிலங்கள் நடத்தி முடித்து விட்டதால், தமிழகத்தில் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும். மத்திய அரசு தேர்வுகளை நடத்த அனுமதி அளித்துள்ளது. மேலும், தேர்வு மையங்களில் கிருமிநாசினி தெளித்து, மாணவர்கள் மாஸ்க் அணிந்துவருவது உள்ளிட்ட மத்திய அரசு அறிவித்த நடைமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, பின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள்?  மாணவர்கள் உயிரிழந்தால் இழப்பீடு வழங்குவதைத் தவிர, மாணவர்கள் உயிருக்கு யார் உத்தரவாதம் அளிப்பார்கள்? என அரசுத் தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.

அதற்கு தற்போது மாணவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. இனிவரும் நாட்களில் தொற்று பரவல் அதிகமாகும் என்பதால், பின்னாளில் தேர்வு நடத்துவது ஆபத்தானது. தேர்வு தள்ளிவைக்கப்பட்டு நடத்தப்பட்டால் பேராபத்தாக அமையும் என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

10 லட்சம் மாணவர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால்,  தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவதில் எந்த லாஜிக்கும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். ஒன்பது லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்களின் வாழ்வில் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், பத்தாம் வகுப்பு தேர்வை ஜூலை மாதம் நடத்தலாமே? எனவும் தெரிவித்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினித் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வில் நடந்த இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் சங்கம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் அருண் ஆகியோர் ஆஜரானார்கள். அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், பள்ளிக் கல்வித் துறை வழக்குகளுக்கான அரசு சிறப்பு வழக்கறிஞர் முனுசாமி ஆகியோர் ஆஜரானார்கள்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்வை தள்ளிவைக்க முடியுமா என தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும், பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான கூடுதல் அறிக்கையை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டும், ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன், இந்த வழக்கையும் சேர்த்து ஜூன் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதேசமயம் தொற்று தீவிரமடையும் நிலையில் தேர்வை தள்ளிவைப்பது உகந்ததாக இருக்குமா என மாணவர்களும் பெற்றோர்களும் யோசிக்க வேண்டுமென பரிந்துரை செய்து உள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்