Skip to main content

பிரியாணி நகரை ஆட்சி செய்யப் போவது யார்? அமைச்சர்கள் சிபாரிசு எடுபடுமா?

Published on 25/02/2022 | Edited on 25/02/2022

 

Who is going to rule the city of Biryani? Will the ministers take the recommendation?

 

ஆம்பூர் நகராட்சியில் இஸ்லாமியர்கள், இந்துக்கள் சமமாக, ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த நகராட்சியில் நூற்றாண்டாக ஒரு மரபு பின்பற்றப்பட்டு வருகிறது. நகரமன்ற தலைவராக ஒருமுறை இந்து மதத்தை சேர்ந்தவரை தேர்வு செய்தால் அடுத்தமுறை இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவரை தேர்வு செய்யவார்கள். இந்த மரபு இதுவரை மீறப்பட்டதில்லை. ஒவ்வொரு உள்ளாட்சி தேர்தலின்போதும் ஆளும்கட்சியாக யார் இருந்தாலும் அந்த மரபை பின்பற்றி வருகின்றனர். அதன்படி கடந்த 2011 – 2016ல் இந்து மதத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் நகரமன்ற தலைவராக இருந்ததால் இந்தமுறை இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவரை நகரமன்ற தலைவராக்க வேண்டும்.

 

ஆம்பூர் நகராட்சி 36 வார்டுகளை கொண்டது. தேர்தலின்போது திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் 36 வார்டுகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியது. அதிமுக 25 வார்டுகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தியது. மீதியிடங்களுக்கு நிற்க அதிமுகவினர் யாரும் முன்வரவில்லை. தேர்தலின் முடிவில் திமுக 21 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும், பாஜக ஒன்று, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மமக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுயேட்சைகள் 8 என வெற்றி பெற்றனர். தனித்து நகர மன்ற தலைவர், நகர மன்ற துணை தலைவர் பதவியை பிடிப்பதற்கான பலத்தோடு ஆளுங்கட்சியான திமுக உள்ளது. இதனால் நகர மன்ற தலைவர் பதவியை பிடிக்க திமுகவில் பலத்த போட்டி நிலவுகிறது. இந்த நகராட்சியின் தலைவர் பதவி பொதுப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் என யார் வேண்டுமானாலும் போட்டிப்போட்டு சேர்மனாகலாம்.

 

ஆம்பூர் நகர திமுக கமிட்டி, மாவட்ட சிறுபான்மை அணி நிர்வாகியான கவுன்சிலர் ஷப்பீர் அகமத்வை சேர்மனாக்க வேண்டும் என்கிறது. ஆம்பூரில் பிரபலமான தனியார் காலணி தொழிற்சாலை உரிமையாளர் எந்த ஆட்சியாக இருந்தாலும் ஆம்பூர் சேர்மன் யார் என்பதை அவர் மறைமுகமாக தீர்மானிப்பார். அவர் திமுகவை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் ஏஜாஸ் அகமத் வை சேர்மனாக்க வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆம்பூர் எம்.எல்.ஏ வில்வநாதன் அதற்கு துணையாக நிற்கிறார். 2006-2011ல் நஜீர் அஹமத் வை சேர்மனாக்க வேண்டும் எனக்கேட்டார் அந்த தொழிலதிபர். அதன்படி நஜீர் அஹமத் சேர்மனாக்கினோம், இவரால் கட்சிக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. நகரத்தில் 10 ஆண்டுகள் பின்னோக்கி போய்விட்டது திமுக. நகரத்தில் அதிமுக பலமானதோடு, பாஜக வளர்ந்தது. இப்போது ஏஜாஸ் அஹமத் அல்லது நிஜார் அஹமத்வை முன்னிறுத்துகிறார் அந்த தொழிலதிபர். அவர் சொல்வதுப்போல் செய்தால் அரசியல்ரீதியாக கட்சிக்கு இங்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்பதை தலைமை கவனத்தில் எடுக்க வேண்டும் என்கிறார்கள் திமுகவின் ஒருதரப்பினர்.

 

திருப்பத்தூர் மாவட்ட அரசின் பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு, திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளர் தேவராஜ் எம்.எல்.ஏ யாரை தேர்வு செய்து சிபாரிசு செய்யப்போகிறார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது. திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், துரைமுருகன் சிபாரிசை ஏற்கபோகிறதாறா? அமைச்சர் எ.வ.வேலு சிபாரிசை ஏற்கபோகிறாரா? மூவரில் யார் சேர்மன் என்கிற பெரிய எதிர்பார்ப்பு ஆம்பூர் நகரத்தில் ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

தேர்தல் பணம் பங்கீடு தொடர்பாக பாஜகவினர் மோதல்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Clash between BJP members over distribution of election money

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதி ஆம்பூரில் பாஜகவினரிடையே வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லும் முகவர்கள் மற்றும் இதர செலவுகளுக்காக பணம் கொடுப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே கடந்த சில தினங்களாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை முதல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த பாஜகவினர், மாலை நேரத்தில் திடீரென இருதரப்பாக பிரிந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்கு வாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயமடைந்தக் கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீவர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் பாஜகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.