Skip to main content

வெவ்வேறு சம்பவங்களில் 6 பேர் படுகொலை; “நடந்தது என்ன?” - போலீஸ் டி.ஜி.பி. விளக்கம்!

Published on 09/09/2024 | Edited on 09/09/2024
What happened Police DGP Explanation about 6 people issue different incidents

இன்றைய தமிழ் நாளிதழ் ஒன்றில், ‘6 பேர் படுகொலை! நேற்று ஒரே நாளில் அதிமுக பிரமுகர் உட்பட கேள்வி குறியாகிறது தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம்’ என்று செய்தி வெளிவந்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு காவல் துறையின் தலைமை இயக்குநரும் படைத் தலைவருமான சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். அதில், “இந்த ஆறு சம்பவங்களின் விவரம் (1) : 08.09.2024 அன்று தென்காசி மாவட்டம், பனவடலிசத்திரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மேலநீலிதநல்லூரைச் சேர்ந்த வெள்ளியப்பன் பாலமுருகனால் கொலை செய்யப்பட்டார். அவ்வூர் கோயில் திருவிழாவில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இறந்து போன நபருக்கும், எதிரிக்குமிடையே ஏற்பட்ட முன்விரோதத்தால் நடந்துள்ளது. இவ்வழக்கில் எதிரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

(2) 08.09.2024 அன்று இராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவல் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட புழுதிக்குளத்தைச் சேர்ந்த மோகன் என்பவரை அவரது உறவினர் பாலாஜி உள்ளிட்ட சிலர் கொலை செய்தனர். இச்சம்பவம், 29.05.2024 அன்று எதிரிகளின் உறவினர் ஒருவர் கொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது. இவ்வழக்கில் 5 எதிரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். (3) 08.09.2024 அன்றிரவு சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயராஜ், சாஸ்திரி நகர்  காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பெசன்ட்நகர் கடற்கரையில் உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது கானா பாட்டு பாடுவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 5 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

What happened Police DGP Explanation about 6 people issue different incidents

(4) 08.09.2024 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஆத்தூப்பாளையத்தைச் சேர்ந்த கோகுல் என்பவர் பொதுமக்களுக்கு இடையூறு செய்த துரைசாமியை கண்டித்ததால் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் துரைசாமி கைது செய்யப்பட்டுள்ளார். (5) 08.09.2024 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சின்ன பாறையூரைச் சேர்ந்த பழனியை சொத்து தகராறு காரணமாக அவரது உறவினர் கண்ணாயிரம் உள்ளிட்டோர் கொலை செய்தனர். இவ்வழக்கில் 5 எதிரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். (6) 07.09.2024 அன்று கோயம்புத்தூர் மாநகர், செல்வபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பழைய தோட்டம் பகுதியில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிக்கப்பட்டதால் ஏற்பட்ட முன்விரோதத்தால் கோகுலகிருஷ்ணன் என்பவரை பிரவீன் உள்ளிட்டோர் கொலை செய்தனர். இவ்வழக்கில் எதிரிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே இந்த அனைத்து சம்பவங்களும் சொத்து தகராறு, உறவினர்களுக்கிடையே முன்விரோதம், திடீர் ஆவேசம் போன்றவற்றால் நடைபெற்றுள்ளனவே தவிர. சாதி, மத மோதல் காரணமாகவோ, கலவரத்தை ஏற்படுத்தும் அல்லது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலோ நடைபெற்றவை அல்ல. எனினும், இச்சம்பவங்களில் தொடர்புடைய எதிரிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எனவே. வீண் விளம்பரத்திற்காகவும், பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் மிகைப்படுத்தி உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவது உகந்ததல்ல” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்