Skip to main content

அந்தமானிலிருந்து தென்னங்கன்றுகள் போர்க்கப்பலில் கொண்டுவந்து வழங்குகிறோம்- மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேச்சு!

Published on 30/11/2018 | Edited on 30/11/2018

 

NIRMALA SEETHARAMANM

 

அந்தமானில் இருந்து தென்னங்கன்றுகள் போர்க்கப்பலில் கொண்டுவந்து விவசாயிகளுக்கு வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று நெடுவாசலில் புயலில் பாதிக்கப்பட்ட மக்கள் முன்பு பேசினார். விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

 

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் கடந்த சில நாட்களாக கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். 

 

இந்த வகையில் வெள்ளிக் கிழமை புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் வந்தார். அவருடன் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தராஜன், பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா, மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் வந்திருந்தனர். மேலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் கணேஷ் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

விழா பொது மேடையில் நடந்த விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது.. புதுக்கோட்டை மாவட்டத்தில் 4062 கிராமங்களில் 47 ஆயிரம் மின்கம்பங்கள் உடைந்து சேதமடைந்துள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட நகரம், கிராமங்களில் குடிதண்ணீர் சேதைவை பூர்த்தி செய்யும் வகையில் 4800 மின் பணியாளர்களைக் கொண்டு பணிகள் தீவிரமா நடந்து வருகிறது. ஆந்திராவில் இருந்து ஆயிரம் பணியாளர்கள் வந்துள்ளனர். இன்னும் சில நாட்களில் முழுமையாக மின்சாரம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. 

 

மேலும் மாவட்டத்தில் தென்னை 7 லட்சம், பலா 36 ஆயிரம் மரங்களும், தேக்கு ஒரு லட்சம், மா 500 ஏக்கர் இப்படி பல மரங்களும் விவசாய பயிர்களும் முற்றிலும் அழிந்துள்ளது. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் மக்கள் எதிர்த்த போது ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிறுத்தியதால் மக்கள் நன்றி சொல்கிறார்கள். அதே போல தற்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர் என்று பேசினார்.

 

கூட்டத்தில் பேசிய எச்.ராஜா.. வடகாடு, நெடுவாசல் பகுதி எப்பவும் கேரளாவின் சூழ்நிலையில் இருக்கும். இப்போது தென்னை மரங்கள் உள்பட அனைத்தும் அழிந்துள்ளது. கடவுளுக்கு ஒப்பானவர்கள் விவசாயிகள். அதனால்தான் சொல்கிறேன் விவசாயிகள் மனம் உடைய வேண்டாம். மத்திய அரசு துணை நிற்கும் என்றார்.

 

நெடுவாசல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் பேசிய தெட்சிணாமூர்த்தி.. விவசாயிகள் இன்று மரம், செடி, கொடி வீடு எல்லாம் இழந்து நிர்கதியாக நிற்கிறோம். ஹைட்ரோ கார்ப்பனை நிறுத்தியது போல தற்போது எங்கள் வாழ்வாதாரம் திரும்பபெற மத்திய, மாநில அரசுகள் உதவிகள் செய்ய வேண்டும். விவசாயிகளின் வாழ்க்கை 25 ஆண்டுகள் பின்நோக்கி சென்றுவிட்டது. என்று கூறி கிராமத்தின் மொத்த பாதிப்புகளை கிராமத்தினர் மனுவாக கொடுத்தனர். அதில் ஒரு லட்சம் தென்னை, நெல், கரும்பு தலா 500 ஏக்கர், வாழை, சோளம் தலா 200 ஏக்கர் மற்றும் பல்வேறு மரங்கள் 200 ஏக்கரில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் கூரை மற்றும் ஓட்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.   

 

மனுக்களைப் பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரமன்.. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி பேசினார்.. அப்போது அவர் பேசியதாவது..

முதலில் புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து நிற்கும் அனைவருக்கும் மத்திய அரசின் பாரதப் பிரதமர் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக விண்ணப்பம் கொடுக்கலாம். மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுங்கள் பயனாளிகள் அனைவருக்கும் வீடு கட்ட நிதி வழங்கப்படும். 

 

தென்னை மரங்கள் அதிகமாக அழிந்துள்ளது. அவற்றை வெட்டி அகற்ற உதவிகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. மாற்றாக தென்னை கன்றுகள் நடவு செய்ய தமிழ்நாட்டில் கன்று கிடைக்கவில்லை என்றால் உடனடியாக ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா, அல்லது அந்தமானில் இருந்து தென்னை கன்றுகளை போர்க்கப்பலில் தூத்துக்குடி கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் கன்று உற்பத்தி குறைவாக உள்ளது என்று சொன்னால் உடனடியாக தென்னை கன்றுகள் கொண்டு வருவோம்.

 

 

தென்னை வளர்ந்து 5 வருடத்தில் பலன் கொடுக்கும். அதற்குள் வேறு வருமானம் பெற ஊடுபயிர் செய்ய வேளாண்துறை அதிகாரிகள் ஆலோசனை சொல்வார்கள். மேலும் தற்போது மின்சாரம் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்பதை கிராமங்களில் நேரடியாக பார்த்து வருகிறேன். அதனால் தமிழக அரசு கேட்டதைவிட 80 மடங்கு அதிகமாக மண்எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. அதனை உடனே பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு எடுத்து வந்து வழக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் யாரும் தன்னம்பிக்கை இழக்க கூடாது. பயிர்காப்பீடு செய்ய கால நீடிப்பு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு தமிழக அரசே உடனடியாக காப்பீடு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து எதிர்பார்க்க வேண்டாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மத்திய அரசு காப்பீட்டு தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கும் என்று பேசினார்.

 

 

    

சார்ந்த செய்திகள்