
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட எந்தத் தடையும் இல்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சென்று வழிபடுவதற்குப் பன்னெடுங்காலமாக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. ‘அனைத்து வயது பெண்களும் அங்கு சென்று வழிபட எந்தத் தடையும் இல்லை. பக்தியில் பாலினபாகுபாடு பார்க்கக்கூடாது’ என்று உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம்.
உயிரியல் அடிப்படையிலோ, உடலியல் அடிப்படையிலோ எந்த பாகுபாட்டையும் காட்டக்கூடாது எனக் கூறியுள்ள உச்சநீதிமன்றம் ‘ஆண்கள் விரதமிருப்பதற்காகப் பெண்கள் தண்டனையை சுமக்க வேண்டுமா?’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அய்யப்ப பக்தர்களை தனிப் பிரிவினராகக் கருத முடியாது என்று நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.
சபரிமலை தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு பரந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாகும். ஆண்டவன் சந்நிதியில் பாலின பாகுபாடு கூடாது என்றால் சாதி பாகுபாடு மட்டும் பார்க்கலாமா என்ற கேள்வி எழுகிறது. தலித்துகள் சென்று வழிபட முடியாத லட்சக்கணக்கான கோவில்கள் இந்த நாட்டில் உள்ளன. அந்த பாகுபாட்டைக் களைவதற்கு நீதிமன்றம் தீர்ப்பளிக்கவேண்டும் எனக் காத்திராமல் அரசாங்கங்களே அதைக் களைய முன்வரவேண்டும் என வலியுறுத்துமிறோம்.
வழிபடும் உரிமைகள் மட்டுமின்றி அர்ச்சனை செய்வதிலும் பெண்களுக்கு இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். பெண்களை அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு அரசு முன்வரவேண்டும். அதற்கான பாதையை இந்த தீர்ப்பு அமைத்துத் தந்துள்ளது.
சபரிமலை வழக்கில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா அளித்துள்ள சிறுபான்மை தீர்ப்பில் அவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பெரும்பான்மை தீர்ர்ப்பிலேயே விடையுள்ளது என்பதால் இந்தத் தீர்ப்பை விரிவான அமர்வுக்கு எடுத்துச் செல்லவோ, சீராய்வு செய்யவோ தேவையில்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதிகளுக்கு எமது பாரட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என கூறியுள்ளார்.