திருக்கோவிலூர் தொகுதியில் உள்ளது ஏமப்பேர் ஊராட்சி. இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், அந்த கிராமத்திற்கான ஓட்டுச்சாவடி மையம் திறக்கப்பட்டது. அதன்படி, கடந்த 6ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்காளர்கள் வாக்களித்தனர்.
அதன்பிறகு, வாக்குச்சாவடியில் இருந்த வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் ஓட்டுப்பதிவு இயந்திரம் சீல் வைக்கப்பட்டது (விவிபேட்). இரவு 9 மணிக்கு மேல் அந்த ஓட்டுச்சாவடி அலுவலர் சீல் வைக்கப்பட்ட அந்த ஓட்டுப்பதிவு எந்திரத்தை திறந்துள்ளார். அதைக் கவனித்த, அங்கிருந்த வேட்பாளர்களின் முகவர்கள் 'ஏன் திறக்கிறீர்கள்' என்று கேட்டுள்ளனர். இயந்திரத்தில் பேட்டரி மாற்றுவதற்காக திறந்ததாக அங்கிருந்த அதிகாரிகள் கூறியுள்ளனர். அதை ஏற்கமறுத்த வேட்பாளர்களின் ஏஜெண்டுகள், இதுகுறித்து தங்களது கட்சியினருக்குத் தெரியப்படுத்தினர். உடனே அதிமுக, பாமகவினர் ஓட்டுச்சாவடி முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தத் தகவல், அறிந்த விழுப்புரம் மாவட்ட காவல்துறை ஏ.டி.எஸ்.பி. தேவநாதன் டிஎஸ்பிக்கள் நல்லசிவம், வசந்த ராஜ், இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் துணையுடன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், தீர்வு ஏற்படவில்லை. பின்னர், ஓட்டுச்சாவடி அலுவலர் கார்த்திகேயன், "இந்த ஓட்டுச் சாவடியில் மொத்தம் 669 வாக்குகள் உள்ளன. இதில், 551 வாக்குகள் பதிவாகியுள்ளன. பதிவான எந்திரத்தில் ஒரு ஓட்டு அதிகமாகப் பதிவாகி இருந்தாலும், அதற்கு நானே பொறுப்பு என எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துள்ளார்". அதன்பிறகே, போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரம் சீல் பிரிக்கப்பட்ட சம்பவம் திருக்கோவிலூர் தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.