Skip to main content

நிறைவேறாத விவேக்கின் கனவு... உருகும் ரசிகர்கள்...

Published on 17/04/2021 | Edited on 17/04/2021

 

vivekh's unfulfilled dream

 

திரைப்பட நடிகர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

எண்பதுகளின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தொண்ணூறுகளின் இறுதிக்குள் தன்னைத் தவிர்க்க முடியாத நகைச்சுவை நட்சத்திரமாக நிலைநிறுத்திக் கொண்டவர் நடிகர் விவேக். இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1987-ல் வெளியான 'மனதில் உறுதிவேண்டும்' என்ற படமே நடிகர் விவேக்கின் அறிமுகப்படம். இயக்குநர் கே.பாலச்சந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட ரஜினிகாந்த், கதாநாயகனாகத் தொட்ட உயரத்திற்கு இணையான உயரத்தை, நடிகர் விவேக் தமிழ் காமெடி உலகில் தொட்டவர்; நகைச்சுவையான நடிப்பின் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் சமூக கருத்துகளை விதைத்தவர்.

 

திரையில் சமூக கருத்துகள் பேசுவதோடு நின்றுவிடாமல், நிஜ வாழ்க்கையிலும் சமூகத்தின் நலனுக்காக உழைத்தவர் விவேக். பல்வேறு அறக்கட்டளைகள் மூலமாகக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி, சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகியவற்றிற்காகவும் பாடுபட்டார் விவேக். இந்நிலையில், விவேக்கின் உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது நிறைவேறாத ஒரு கனவு குறித்த பதிவு சமூகவலைதளங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. 

 

சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகளுக்காக உழைத்த விவேக், தனது வாழ்நாளில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என இலக்கு நிர்ணயித்திருந்தார். இதற்காக அவர் கடினமாக உழைத்தும் வந்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதுவரை சுமார் 33.23 லட்சம் மரக்கன்றுகளை விவேக் நட்டுள்ளார். அவரது கனவான ஒரு கோடி மரங்கள் என்ற இலக்கினை அடைவதற்குள் விவேக் உயிரிழந்துள்ள நிலையில், அவரது இந்த கனவு நிறைவேறாமலேயே அவர் நம்மைப் பிரிந்துவிட்டார் என ரசிகர்கள் தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் உருக்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்