Skip to main content

சிபாரிசுக்கோ லஞ்சத்துக்கோ இடமில்லை! 902 காவலர்களுக்கு ஒரே நேரத்தில் டிரான்ஸ்பர்! இப்படியும் ஒரு எஸ்.பி.!

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

virudhunagar sp who gave simultaneous transfer to 902 constables

 

விருதுநகர் மாவட்ட காவல்துறை சத்தமில்லாமல் ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. முதலில், கடந்த கால நடைமுறையைப் பார்ப்போம். காவல்துறையில் டிரான்ஸ்பர் கேட்பவர் மனுவானது மாவட்ட  தலைநகரில் உள்ள அத்துறையின் முக்கியப் புள்ளியிடம் கொண்டுபோய்ச் சேர்க்கப்படும். இந்த வேலையை பார்ப்பதற்கென்றே ஒருவர் இருப்பார்.  

 

இதில், சாதாரண இடமாற்றத்துக்கு குறைந்தபட்சம் ரூ.5000 வரையும், மதுவிலக்கு போன்ற குறிப்பிட்ட பிரிவுக்கு இடமாற்றம் வேண்டுமென்றால் ரூ.20000 வரையும் கறக்கப்படும். சிபாரிசு அடிப்படையிலும் டிரான்ஸ்பர் கிடைக்கும். இந்த பழைய லஞ்ச நடைமுறையை தற்போது இல்லாமல் செய்துவிட்டார் தற்போதைய விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசபெருமாள். அவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காவல்நிலைய அதிகாரிகளுக்கு தகவல் ஒன்றை அனுப்பினார். அதில், ‘தற்போதுள்ள காவல்நிலையத்தில் மூன்று ஆண்டுகள் பணிநிறைவு செய்த நிலையில், இடமாறுதல் மனுக்களை சமர்ப்பித்துள்ள காவலர்கள், விருதுநகரில் நடைபெறும் முகாமில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இது மிக அவசரம்.’ எனக் குறிப்பிட்டிருந்தார்.     

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 54 காவல்நிலையங்களில் 3200 காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஒரே காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு சார்பு ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், முதல்நிலைக் காவலர்கள், போக்குவரத்துக் காவலர்கள், மகளிர் காவலர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பணிமாறுதல் வேண்டி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனைக் கருத்தில்கொண்டே பொது பணிமாறுதலுக்கான சிறப்பு முகாமை விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்தார் எஸ்.பி. ஸ்ரீனிவாசபெருமாள். இடமாறுதலுக்கு மனு செய்து அந்த முகாமில் கலந்துகொண்ட பல்வேறு நிலைகளில் பணியாற்றும் காவலர்கள், அவர்கள் விருப்பப்பட்ட மூன்று இடங்களைக் குறிப்பிட்டனர். அந்த மூன்றில் ஒரு இடத்துக்கு இடமாறுதல் வழங்கி உத்தரவிட்டார் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீனிவாசபெருமாள். அந்த முகாமில் ஒரே நேரத்தில் 902 காவலர்களுக்கு இடமாறுதல் உத்தரவு பிறப்பித்தார்.

 

virudhunagar sp who gave simultaneous transfer to 902 constables

 

இடமாறுதல் கிடைத்த குதூகல மனநிலையில் இருந்த காவலர்களிடம் எஸ்.பி. ஸ்ரீனிவாசபெருமாள், தனது எதிர்பார்ப்பை வலியுறுத்தத் தவறவில்லை. “நீங்க விரும்பிய இடத்துக்கு உங்களுக்கு போஸ்டிங் போட்டிருக்கிறோம். நீங்க பணியாற்றவிருக்கும் காவல்நிலையங்களில் நல்லமுறையில் வேலைபார்க்க வேண்டும். அங்கே போனபிறகு, திரும்பவும் டிரான்ஸ்பர் கேட்டு  வரக்கூடாது. அங்கே போயி ஒழுக்கக்கேடா (corruption) நடந்து பெயரைக்  கெடுத்துக்கொள்ளக் கூடாது. நீங்க பண்ண வேண்டியது இந்த ரெண்டும் தான்.” என்று அறிவுறுத்தினார். வாய்மையே வெல்லும் எனும் வாசகத்தை முத்திரையாகக் கொண்டுள்ள தமிழ்நாடு காவல்துறை, இதுபோன்ற நற்செயல்களால் கோபுரமாக உயர்ந்து  நிற்கிறது.  

 

 

சார்ந்த செய்திகள்