Skip to main content

ஊழல் புகார்; கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு!

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

 village council meeting near Kattumannarkoil due to talk of corruption

 

காட்டுமன்னார்கோவில் அருகே கண்டியன்குப்பம் ஊராட்சியில் மே தினத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் அந்த பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு ஊராட்சியில் உள்ள குறைகள் குறித்து பேசினார்கள்.

 

அப்போது விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் கண்டியன்குப்பம் ஊராட்சி ஏரியில் கிராவல் மண்ணை வெட்டி விற்பனை செய்ததில் 25 லட்சத்துக்கு மேல் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளது என்றும், மேலும் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கிராவல் மண்ணை வெட்டி விற்பனை செய்த ஒப்பந்ததாரர்களிடம் பழுதடைந்த சாலையை சரி செய்வதாக ரூ. 25 லட்சம் ஊராட்சி தலைவர் வாங்கியுள்ளார். இதற்கு ஊராட்சி நிர்வாகத்தில் கணக்கு காட்டவில்லை. சாலையையும் போடாமல் ஊராட்சி மன்ற தலைவர் அத்தொகையை கையாடல் செய்துள்ளார் என குற்றம்சாட்டி பேசினார்.

 

மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வேண்டுமென்றால் தண்ணீர் வரி, வீட்டு வரி கட்டச் சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும், ஏழ்மை நிலையில் உள்ள சாதாரண மக்களின் புறம்போக்கு இடத்தில் உள்ள குடிசைகளை அப்புறப்படுத்த வேண்டும் என நிர்பந்தப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

 

இது குறித்து கிராம சபை கூட்டத்தில் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவி கலித்தா மரியகொரத்தி காவல்துறையிடம் புகார் அளித்தார். பதிலுக்கு  விவசாய தொழிலாளர் சங்கத்தினரும் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து இருதரப்பினரையும் அழைத்து உரிய விசாரணை மேற்கொள்வதாக ஒன்றிய நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் உறுதி அளித்தனர். இந்நிகழ்வால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிகழ்வில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் வட்டச் செயலாளர் வெற்றி வீரன், விவசாய சங்க வட்டத் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 1 கோடி பறிமுதல்; ஊராட்சித் தலைவர் மீது வழக்குப்பதிவு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Rs. 1 crore confiscation; Case registered against panchayat chairman

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் மாவட்டம் எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா வீட்டில் ரூ.1 கோடி நேற்று (12.04.2024) தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடி தொடர்பாக வருமான வரித்துறை விசாரித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து திவ்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 கோடி யார் மூலம் வந்தது என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா அதிமுகவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. 

Next Story

ஏ.வி. ராஜு மீது கருணாஸ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Complaint against AV Raju in Karunas Police Commissioner's office

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளைத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்திருந்தார். அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு த்ரிஷாவுக்கு ஆதரவாக சேரன், ஃபெப்சி அமைப்பு, மன்சூர் அலிகான், விஷால் உள்ளிட்டவர்கள் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே ஏ.வி. ராஜு, “என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில், சில ஊடகங்களில் திரைப்படத் துறையினரை அவதூறாக நான் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நான் பேசியது அரசியல் ரீதியாக மட்டும் தான் பேசினேன். அந்த இடத்தில் பேட்டியை முடித்த பின்பு ஒரு சிலர் கேட்ட கருத்துக்கு நான் அந்த விளக்கத்தை சொன்னேன். எந்த இடத்திலும் திரைத்துறையினரை வருத்தப்படும் அளவிற்கு பேசக் கூடியவர் நான் அல்ல.

ஒருவேளை அப்படி பேசியதாக தகவல்கள் உங்களுக்கு தவறாக கிடைத்திருந்தால், நான் உங்கள் அனைவருக்கும், பெப்சிக்கும், திரைப்பட நடிகர் சங்கத்திற்கும் மற்றும் சம்பந்தப்பட்ட திரிஷாவுக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவேளை மனம் புண்படும்படி இருந்திருந்தால் என் சார்பாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என வீடியோ வெளியிட்டிருந்தார். 

கூவத்தூர் விவகாரத்தில் த்ரிஷாவை சம்பந்தப்படுத்தி பேசியபோது கருணாஸ் குறித்தும் பேசியிருந்தார். இந்த நிலையில், ஏ.வி. ராஜு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். மேலும் அவரது பேட்டியை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.