ஆயுதபூசையையொட்டி, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் உள்ள மலர்ச் சந்தைகளில் விற்பனை களைகட்டியது. விழாக்காலம் என்பதால், கடந்த வாரத்தைக் காட்டிலும் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஆயுதபூசை, சரஸ்வதி பூசை கொண்டாட்டங்களும், வழிபாடுகளும் கோலாகலமாக நடைபெறும். இதில் மலர் அலங்காரம் முக்கிய அங்கம் வகிக்கும். இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள மலர்ச் சந்தைகளில் விறுவிறுப்பாக விற்பனை நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், சந்தைக்குப் பூக்களின் வரத்துக் குறைந்து, விலை அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் ஒரு கிலோ ரூபாய் 400- க்கு விற்பனையான குண்டுமல்லிகை 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சம்பந்தி உள்ளிட்ட பூக்களின் விலை ஒரு கிலோவுக்கு ரூபாய் 100 வரை உயர்ந்துள்ளது. .
கடலூர் மாவட்டம், திருப்பாதிரிபுலியூர் மலர்ச் சந்தையில் மூன்று மணி நேரத்தில் 15 டன் பூக்கள் விற்பனையாகின. அதேபோல், திண்டுக்கல் சந்தை, திருச்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டில் பூக்களை வாங்க ஏராளமானோர் திரண்டனர். மதுரையில் மாட்டுத்தாவணி சந்தையில் பூக்களின் வரத்து அதிகரிப்பால், விலை குறைந்தது.