வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சியை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் 300- க்கும் அதிகமான வியாபாரிகள், பொதுமக்கள் கலந்துக்கெண்டனர்.
நகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக, மக்கள் கருத்தை கேட்காமல், வியாபாரிகளை அழைத்து பேசாமல், சொத்து வரியை உயர்த்தியதை திரும்ப பெறு. 10 மடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரி, குடிநீர் வரியால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளோம். அதனால் அதனை திரும்ப பெற வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அடிப்படை வசதிகள் செய்து தராத நிர்வாகம், வரியை உயர்த்துவது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினர். அதோடு, சாலைகளில் தெருவிளக்குகள் எரியவில்லை, கால்வாய்கள் தூர்வாரவில்லை, கொசு தொல்லை அதிகமாக உள்ளது, குப்பைகளின் நகராக மாறியுள்ளதை சரிசெய்யாத நிர்வாகம், வரியை மட்டும் உயர்த்துவது ஏன் என கேள்வி எழுப்பினர்.
எங்களின் இந்த கோரிக்கை ஏற்காவிட்டால் கடையடைப்பு செய்வோம், தீவிரமாக போராட்டத்தில் இறங்குவோம் என மாவட்ட நிர்வாகத்தையும், நகராட்சி நிர்வாகத்தையும் எச்சரித்தனர்.