Skip to main content

அம்மா உணவகத்தில் ஆய்வு! சாப்பிடுவது போல் நடித்த அமைச்சர், எம்.எல்.ஏ.,

Published on 25/04/2020 | Edited on 25/04/2020


வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் பேருந்து நிலையம் அருகில் அம்மா உணவகம் உள்ளது. தற்போது 3 வேளையும் இலவசமாகப் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஏப்ரல் 24- ஆம் தேதி பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணி அங்கு ஆய்வு செய்ய சென்றார். அப்போது கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவான அதிமுகவை சேர்ந்த லோகநாதன், நகராட்சி ஆணையர் ரமேஷ், அதிமுக ந.செ பழனி ஆகியோர் உடன் சென்றனர். அமைச்சர் மற்றும் எம்எல்ஏ, கட்சி நிர்வாகிகளுக்கு, பொதுமக்களுக்கு வழங்கிய அதே உணவை சில்வர் தட்டில் வைத்து தந்தனர்.
 


அங்கு வந்திருந்த பத்திரிகை போட்டோகிராபர்கள் மற்றும் செய்தி தொலைக்காட்சி கேமராமேன்களுக்குச் சாப்பிடுவது போல போஸ் தந்தனர். அதில் நகராட்சி ஆணையர் ரமேஷ் மட்டும் இரண்டு வாய் சாப்பிட்டார். மற்றவர்கள் சாப்பிடுவது போல் போஸ் மட்டும் கொடுத்தனர். அதிலும் கே.வி.குப்பம் எம்.எல்.ஏ லோகநாதன், தன் முகத்தில் போடப்பட்டுயிருந்த முகக்கவசத்தைக் கூட அவிழ்க்காமல் சாப்பிடுவது போல் போஸ் கொடுத்தார். ந.செ பழனி, பாதி முகக்கவசத்தை அவிழ்த்துவிட்டு சாப்பிடுவது போல் போஸ் கொடுத்தார். அமைச்சர் வீரமணி சாப்பிடுவது போல் வாயறுகே சாப்பாட்டைக் கொண்டு சென்றதோடு சரி.
 

 

vellore gudiyattam amma unavagam


அப்படியே தட்டுகளை வைத்துவிட்டு கை கழுவிக்கொண்டு கிளம்பிச்சென்றனர். இதை அங்கிருந்த உணவு சமைத்து வழங்கும் பெண்கள் குழுவைச் சேர்ந்த பெண்களும், உணவகத்திற்குச் சாப்பிட வந்தவர்களும் வேதனையுடன் பார்த்தனர். ''பணக்காரங்க, அதிகாரத்தில் இருக்காங்க, அவுங்க நம்ம மாதிரி ஏழையா? தட்டுல வாங்கி நின்னுக்கிட்டு சாப்பிடறதுக்கு'' என வேதனையுடன் பேசிக்கொண்டு உணவு வாங்கி உண்டனர் ஏழை மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்