Skip to main content

வேளாங்கண்ணிக்கு வந்த பக்தர்கள் பேருந்து இல்லாமல் வெயிலில் அவதி!!!

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தேவாலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் பேருந்து வசதி இல்லாமல் கொளுத்தும் வெயிலில் அவதியுற்ற சம்பவம் பார்ப்பவர்களை கலங்க வைத்துவிட்டது.

 

velankanni


புனித வெள்ளி திருவிழாவையொட்டி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயத்திற்கு, இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள், பக்தர்களாக நடைபயணமாகவே வந்து வழிபட்டுவிட்டு பேருந்தில் திரும்பி செல்வது வழக்கம். இந்த ஆண்டும் அப்படித்தான் பெரும்பாலான மக்கள், குடும்பம், குடும்பமாக நடந்து வந்தார்கள். 
 

மாதாவை வணங்கிவிட்டு ஊருக்கு திரும்பி செல்ல போதுமான பேருந்துகள் இல்லாமல் போனதால் பக்தர்கள் அங்குள்ள பேருந்து நிலையத்திலேயே குழந்தைகளோடு, கொசுக்கடியிலும், வெயிலின் வெக்கையிலும் தவித்தனர். சிலர் நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றால் பேருந்து கிடைக்கும் என்று மீண்டும் பாதயாத்திரையாக செல்லும் நிலையும் இருந்தது. சிலர் கிடைத்த சொற்ப பேருந்துகளிலும் குடும்பத்தினரோடு படிக்கட்டுகளில் தொங்கியபடியே ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.
 

"ஈஸ்டர் பண்டிகை நாளான ஞாயிற்றுக்கிழமை நாகை வேளாங்கண்ணி தடங்களிலிருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் விட்டதே இதற்கு காரணம் "என்கிறார்கள் பக்தர்கள்.
 

இதுகுறித்து சென்னையிலிருந்து வந்திருந்த பக்தர்கள் கூறுகையில் "ஏப்ரல் 15ஆம் தேதி சென்னையில் இருந்து குடும்பத்தோடு யாத்திரையை தொடங்கினோம், வெள்ளிக்கிழமை வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வந்து மாதவை வழிபட்டுவிட்டு சொந்த ஊருக்கு செல்லுவதற்கு பேருந்து நிலையம் வந்தால், பேருந்து நிலையத்தில் பேருந்து இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் எங்களுக்கு முன்னாடியே காத்துக் கிடந்தனர். ரயிலில் பயணிக்க வேண்டும் என்றால் அங்கேயும் புக்கிங்க் ஆகிவிட்டது என்கிறார்கள், அதோடு இரவு வரை காத்திருக்க வேண்டிய நிலை இருக்கு. நூறு டிகிரி வெயிலில் குடும்பத்தினரோடு நடந்தே வந்தோம், இனி எப்படி நடந்து செல்வது, வரும் வண்டியில் போகவேண்டியதுதான். அடுத்த ஆண்டிலாவது பக்தர்களின் நலன் கருதி பேருந்துகளை இயக்க முன்வர வேண்டும்." என்றனர் வேதனையுடன்.

 

 

சார்ந்த செய்திகள்