Skip to main content

தண்ணீரில் மூழ்கி இரு குழந்தைகள் உயிரிழப்பு...

Published on 09/10/2020 | Edited on 09/10/2020

 

Two kids passed away while playing in river
                                                           மாதிரி படம்

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ளது கோவடி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த ராஜ், மஞ்சுளா தம்பதியரின் மகள் 12 வயது ஹேமலதா. இவர் திண்டிவனத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். மேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம். வனிதா தம்பதியரின் மகன் ராமகிருஷ்ணன் வயது 4. சில தினங்களுக்கு முன்பு, மேல் பாகத்தில் இருந்து தனது உறவினர் வீடான கோவடிக்கு வந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று சிறுமி ஹேமலதா, சிறுவன் ராமகிருஷ்ணன் இருவரும் உறவினர்களுடன் அப்பகுதியில் உள்ள பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்களுடன் சென்ற உறவினர்கள் கரையோரப் பகுதியில் துணி துவைத்துக் கொண்டிருந்தனர். இதனால் அவ்விரண்டு குழந்தைகளும் ஏரியில் இறங்கி குளிப்பதைக் கவனிக்காமல் இருந்துள்ளனர். 

 

இதற்குள் ஏரியில் இறங்கி குளித்த ராமகிருஷ்ணனும் ஹேமலதாவும் ஆழம் தெரியாமல் நீரில் மூழ்கியுள்ளனர். துணி துவைத்துக் கொண்டிருந்த அவர்களது உறவினர்கள் அதைக் கவனித்து, உடனே  கத்தி கூச்சலிட்டனர். இவர்களின் சத்தம் கேட்டு, அருகில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து, நீரில் மூழ்கிய சிறுவன் சிறுமியை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

 

அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அக்குழந்தைகளின் உறவினர்கள் கதறி அழுதுள்ளனர். மேலும் மருத்துவமனைக்கு கொண்டு வந்த குழந்தைகளை மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்துக் காப்பாற்றவில்லை என்று கூறி அவர்களின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டம் செய்துள்ளனர். தகவலறிந்து வந்த திண்டிவனம் போலீசார் மருத்துவர்களிடம் விசாரணை செய்தனர். பிறகு குழந்தைகளின் பெற்றோர்களிடம் இரண்டு குழந்தைகளும் தண்ணீரில் இருந்து காப்பாற்றிக்கொண்டு வரும் வழியிலேயே இறந்துள்ளனர். மருத்துவமனைக்கு வந்த பிறகு குழந்தைகள் இறக்கவில்லை எனக் கூறி சமாதானம் செய்துள்ளனர்.  

 

Ad

 

இதுகுறித்து, கிளியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் மட்டுமல்ல பல்வேறு மாவட்டங்களிலும் சிறுவர்கள், இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கி இறப்பது தொடர்கதையாகி வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்