Skip to main content

ராமஜெயம் கொலை வழக்கு; புதிய உத்தரவு பிறப்பித்த நீதிபதி

Published on 07/11/2022 | Edited on 07/11/2022

 

trichy ramajayam case

 

தி.மு.க. முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி தொழிலதிபர் கே.என். ராமஜெயம். இவர் 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி  திருச்சியில் நடைப்பயிற்சி சென்றபோது கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

 

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கினை உள்ளூர் போலீசார் முதலில் விசாரித்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்தனர். இருப்பினும் எந்த துப்பும் துலங்கவில்லை. அதைத் தொடர்ந்து ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன், 'இந்த வழக்கைத் தமிழக அரசின் சிறப்புப் புலனாய்வுக் குழு மூலம் விசாரிக்க வேண்டும்' என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமீபத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

 

பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின்படி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், டி.எஸ்.பி. மதன்குமார் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாலன் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் 20 பேரிடம் விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில் அதில் 12 பேரை உண்மைக் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டது. பின்னர் சாமி ரவி, கடலூர் லெப்ட் செந்தில், திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து, சீர்காழி சத்யராஜ், தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், சண்முகம், ராஜ்குமார், சிவ குணசேகரன், சுரேந்தர், கலைவாணன் ஆகிய 13 ரவுடிகளுக்கு திருச்சி கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. 

 

இதைத் தொடர்ந்து கடலூர் லெப்ட் செந்தில், திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், திண்டுக்கல் தினேஷ் ஆகிய 4 ரவுடிகள் தவிர்த்து மீதமுள்ள 9 ரவுடிகளும் திருச்சி 6வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று ஆஜராகினர். அதைத் தொடர்ந்து விசாரணை அதிகாரியும் எஸ்.பி.யுமான ஜெயக்குமார் தொழிலதிபர்  வழக்கு தொடர்பாக மேற்கண்ட ரவுடிகளிடம் உண்மைக் கண்டறியும் சோதனைக்கு அனுமதி தருமாறு மனுத் தாக்கல் செய்தார். அதில், வழக்கு விசாரணையின்போது கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நம்பத் தகுந்த  ஆனால் உறுதி செய்யப்படாத தகவலின் அடிப்படையில் மேற்கண்ட 13 ரவுடிகள் மீது விசாரணை நடத்த வேண்டியுள்ளது என மனுவில் தெரிவித்து இருந்தார்.

 

மேலும் உண்மைக் கண்டறியும் சோதனைக்கு ரவுடிகள் அனைவரும் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுத் தந்திருப்பதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே ரவுடிகள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் உண்மைக் கண்டறியும் சோதனை மருத்துவர்கள் மற்றும் வக்கீல்கள் முன்னிலையில் நடத்த வேண்டும் என வாதிட்டனர்.

 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிவக்குமார் மனுவை ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணையை வருகிற 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் ரவுடிகள் தரப்பில் ஆட்சேபனை மனுக்கள் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின்னர் நடைபெறும் வாதங்களின் அடிப்படையில் உண்மைக் கண்டறியும் சோதனைக்கு நீதிபதி அனுமதி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்