Skip to main content

ராஜஸ்தான் போலீஸில் ஏன் பிடிபட்டனர் தமிழக தனிப்படையினர்? - ஆணையர் விளக்கம்

 

trichy commissioner detailed explanation about tn police enquired by rajasthan police team

 

திருட்டு வழக்கு தொடர்புடைய நகை மற்றும் பணத்தை மீட்க ராஜஸ்தான் சென்ற திருச்சி மாநகர காவல்துறை தனிப்படையினர் தவறான புரிதல் காரணமாக ராஜஸ்தான் ஊழல் தடுப்பு அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பாக நேற்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்யபிரியா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த ரக்கன்(38), ராம்பிரசாத்(22), சங்கர்(25), ராமா(40) ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் தமிழ்நாட்டில் சாலையோரங்களில், தங்கி பலூன், பெட்ஷீட் வியாபாரம் செய்வது போலவும், போக்குவரத்து சிக்னலில் பிச்சை எடுத்துக்கொண்டு வாழ்வது போலவும் திருச்சியில் தங்கியிருந்து இருப்புப்பாதை அருகே உள்ள பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு ஆட்கள் இல்லாத பொழுது வீட்டில் உள்ள பொருட்களைத் திருடி வந்துள்ளனர்.

 

இவர்கள் திருச்சி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 10 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த 10 வழக்குகளில் திருடப்பட்ட சொத்தின் மதிப்பு சுமார் 254 சவரன் தங்க நகைகளும் மற்றும் வெள்ளி பொருட்களும் ஆகும். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் திருடிய நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிய ஒரு வாரத்திற்குள் ராஜஸ்தான் சென்று அங்கு திருட்டு நகை வாங்குபவர்களிடம் விற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திருடப்பட்ட நகைகளை மீட்க கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி அமர்வு நீதிமன்றக் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சியாமளா தேவி நீதிமன்றம் மூலம் அந்த 4 பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டி பிரமாண பத்திரம் தாக்கல் செய்து, ஆணை பெற்று போலீஸ் காவலில் எடுத்துள்ளார்.

 

அதில் ரக்கன், சங்கர் ஆகியோருடன் கண்டோன்மெண்ட் உதவி ஆணையர் கென்னடி தலைமையில் 2 ஆய்வாளர்கள், 1 உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அடங்கிய 15 பேர் கொண்ட தனிப்படையினர் காவல் வாகனத்தில் சாலைமார்க்கமாக கடந்த 28ஆம் தேதி திருச்சியில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். ராஜஸ்தான் சென்ற தனிப்படையினர் பில்வாரா மாவட்டம் சாப்பூரர் என்ற இடத்தில் உள்ள புலியாகலான் காவல் நிலையத்திற்கு மார்ச் 2ஆம் தேதி சென்று உள்ளூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் 3 காவலர்கள் உதவியுடன் புலியா பஜார் என்ற இடத்தில் திருட்டு நகைகளை பெற்று வைத்திருந்த கன்சியாம் என்ற நபரிடமிருந்து திருடப்பட்ட 300 கிராம் தங்கத்தையும் ரொக்கப் பணத்தையும் கடந்த 3ஆம் தேதி பறிமுதல் செய்துள்ளார்கள்.

 

மேலும் திருட்டு நகைகளை வாங்கிய அஜ்மீர் மாவட்டம் ராமலயா கிராமத்தை சேர்ந்த சானியா என்பவரை பினாய் காவல் நிலைய உள்ளூர் காவலர்கள் உதவியுடன் பிடித்து விசாரித்த போது அவர் திருடப்பட்ட 100 சவரன் தங்க நகைகளை திருப்பி கொடுப்பதாக ஒத்துக் கொண்டுள்ளார். பின்னர் உள்ளூர் காவல் அதிகாரிகளின் துணையுடன் ரக்கனின் வீட்டை சோதனையிட்ட தனிப்படையினர் அங்கு இருந்த 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர் அதன் பின்னர் சானியாவிடமிருந்து நகைகளை திரும்ப பெறுவதில் காலதாமதம் ஆவதால் 5 ஆம் தேதி திருச்சிக்கு திரும்பி செல்ல முடிவெடுத்த தனிப்படையினர் மீட்கப்பட்ட நகை, பணம் மற்றும் இருசக்கர வாகனங்களுடன் ஜெய்ப்பூர் விமனநிலையத்திற்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது சுமார் 11.30 மணிக்கு சானியாவின் சகோதரர் லட்சுமணன் என்பவர் தனிப்படையினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருடப்பட்ட தங்க நகைகளுக்கு ஈடாக 25 லட்சம் ரூபாய் கொடுத்து விடுவதாகவும் அஜ்மீர் வந்து தொகையை பெற்றுச் செல்லும்படி தெரிவித்துள்ளார்.

 

அன்று மதியம் 2.30 மணிக்கு உதவி ஆணையர் கென்னடி, ஆய்வாளர் சியாமளாதேவி மற்றும் ஒரு காவலரையும் வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரையும் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு உறையூர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மோகன் தலைமையில் மீதமிருந்த தனிப்படையினர் அஜ்மீருக்கு புறப்பட்டுச் சென்று மாலை 6 மணிக்கு லட்சுமணன் கூறிய இடமான ரயில்வே நிலையம் அருகில் சென்றபோது அங்கிருந்த ராஜஸ்தான் மாநில ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திருச்சி தனிப்படையினரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். லட்சுமணன் என்பவர் திருட்டு வழக்கில் இருந்து தனது சகோதரியை விடுவிக்க வேண்டுமென்றால் 25 லட்ச ரூபாயை தர வேண்டும் என தமிழ்நாடு காவல்துறையினர் தங்களை மிரட்டுவதாக அதிகாரிகளிடம் பொய்யான தகவலை தெரிவித்ததன் பேரில் அதிகாரிகளின் தவறான புரிதல் காரணமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது பின்னர் தெரிய வந்துள்ளது.

 

trichy commissioner detailed explanation about tn police enquired by rajasthan police team

 

அதன் பின்னர் ராஜஸ்தான் காவல்துறையினருக்கும் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கும் தனிப்படையினர் உயர் அதிகாரிகளின் ஒப்புதலோடு தான் திருட்டு வழக்கில் மீட்கப்பட்ட பொருட்களை மீட்பதற்கு முறையான ஆவணங்களுடன் வந்துள்ளனர் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனிப்படையினர் நேற்று மதியம் 3.30 மணியளவில் ராஜஸ்தானில் இருந்து புறப்பட்டனர். தற்போது வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சனை பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், திருச்சியில் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் மிக அமைதியாக உள்ளது.

 

மேலும் திருச்சி மாநகரில் உள்ள வாடகைக்கு வீடுகளை தரும் வீட்டின் உரிமையாளர்களிடம் வாடகைக்கு வருபவர்களின் முழு விவரம் குறித்து அறிந்த பின்னரே அவர்களுக்கு வாடகைக்கு விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்புச் சங்கங்களோடு இதுவரை 80 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அவர்களிடம் குடியிருப்புகளில் நல்ல தரமான கண்காணிப்பு கேமராக்களை பொருத்தக் கூறியுள்ளோம். அதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து திருச்சிக்கு வரும் நபர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்து வருகிறது. காவல்துறை சார்பிலும் அதனைச் செயல்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், திருச்சி மாவட்டத்தில் 5 ஆயிரம் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்களுக்கு வாட்ஸ்ஆப் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவர்களுடைய எண்கள், முகவரி அனைத்தும் பெறப்பட்டு வருகிறது. திருச்சி மாநகரில் ஏற்கனவே உள்ள சில கண்காணிப்பு கேமராக்கள் பராமரிப்பின்றி உள்ளது. எனவே, அவற்றை பராமரிப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் அறிவுறுத்தி உள்ளோம். மேலும், திருச்சி மாநகருக்கு ஆயிரம் கேமராக்களின் தேவை உள்ளது. அவற்றை வாங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது." என்றார்.

 

ராஜஸ்தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட திருச்சி தனிப்படையினரை விடுவிப்பதற்காக தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு ராஜஸ்தான் மாநில டி.ஜி.பி. உமேஷ் மிஷ்ராவிடமும், தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ராஜஸ்தான் மாநில நுண்ணறிவு பிரிவு ஏ.டி.ஜி.பி. செங்கதிரிடமும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.ஜி.பி. ராஜஸ்தான் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.ஜி.பி. ஹேமந்த் பிரியதர்ஷனிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். இவர்களின் கூட்டு முயற்சிக்குப் பின்னரே தனிப்படை போலீசாரை ராஜஸ்தான் போலீசார் விடுவித்தனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !