Skip to main content

துக்க நிகழ்வு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்ல ஒரு மணி நேரத்திற்குள் அனுமதி சீட்டு!

Published on 11/05/2020 | Edited on 12/05/2020
Traffic and medical permits are issued within one hour of departure

 

துக்க நிகழ்வு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்ல அனுமதி கோரும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, 1 மணி நேரத்திற்குள் அனுமதி சீட்டு வழங்கி வருவதாக,  சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருமணம், மருத்துவம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக வெளியூர் செல்பவர்களுக்கு மட்டும் மின்னணு முறையில் அனுமதி சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், எதிர்பாராதவிதமாக ஏற்படும் மரணங்கள் மற்றும் உடல் நலக் குறைவுகளுக்கு உடனடி அனுமதி சீட்டு வழங்கக் கோரி  திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும்போது,  அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், இதனால்,  மக்கள் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மருத்துவம் மற்றும் மரணங்களுக்காக வெளியூர் செல்ல அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது ஒரு மணி நேரத்தில் முடிவெடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாகத்  தெரிவிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரியிருந்தார்.

 

 


இந்த வழக்கு,  நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், நியாயமான காரணங்கள் உள்ள எல்லா விண்ணப்பங்களையும் உடனுக்குடன் பரீசலித்து அனுமதி அளித்து வருவதாகவும், சந்தேகத் தன்மை உடைய விண்ணப்பங்கள் மட்டுமே நிலுவையில் வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்து அதிகாரி மேற்பார்வையில்,   30 நபர்கள் இந்தப்  பிரிவில் பணியாற்றி வருவதாகவும், கால் சென்டர்  செயல்படும் நேரம் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை என்ற போதிலும், துக்க நிகழ்வுகள் மற்றும் மருத்துவ அவசர தேவைகள் என்றால்,  நேரம் குறித்து பொருட்படுத்தாமல் அதிகபட்சம் 1 மணி நேரத்திற்குள்  பயணிப்பதற்கான அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவசரத் தேவைக்கான கட்டுப்பட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


நேற்று மாலை 6 மணி நிலவரப்படி,   திருமணம், துக்க நிகழ்வு, மருத்துவ அவசரம் உள்ளிட்ட தேவைகளுக்காக அளிக்கப்பட்ட 3 லட்சத்து 61 ஆயிரத்து 433 விண்ணப்பங்களில், 3 லட்சத்து 48 ஆயிரத்து 210 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 13,222 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாகவும், சமூக வலைதள புகார்கூட கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத் தரப்பின் விரிவான விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்