Skip to main content

திருவண்ணாமலை தீபத் திருவிழா தொடர்பாக உத்தரவிட முடியாது! -கோவில் நிர்வாகம் முடிவெடுக்கும் என வழக்கு முடித்துவைப்பு!

Published on 19/11/2020 | Edited on 19/11/2020

 

tiruvannamalai deepam festival coronavirus prevention chennai high court

 

 

திருவண்ணாமலை தீபத்திருவிழாவை ஒட்டி, நான்கு மாட வீதிகளில் தேர்த் திருவிழாவை நடத்துவது குறித்து, மாவட்ட நிர்வாகம், காவல் துறை, கோவில் நிர்வாகம்தான் முடிவெடுக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் தேர் திருவிழாவை நடத்த, தமிழக அரசு மற்றும் கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிடக்கோரி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் வட தமிழகத் துணைத் தலைவர் வி.சக்திவேல், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்யநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தீபத் திருவிழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும், கோவிலுக்குள் தேர் திருவிழா நடத்தப்படும் எனவும், இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

 

அப்போது குறுக்கிட்ட மனுதாரர்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர், ‘தீபத் திருவிழாவைத் தவிர்த்து மற்ற நாட்களில், 5000 பேரை அனுமதிப்பதாக கூறும்போது, உற்சவ மூர்த்திகள் ஊர்வலத்தையும், தேர்த் திருவிழாவையும் மாட வீதிகளில் நடத்த அனுமதிக்க வேண்டும். ஒரு ஆண்டுக்கு அனுமதித்தால் அதுவே வழக்கமாகி விடும். மாடவீதிகளின் நுழைவு வழிகளைத் தடை செய்யலாம். அதனால், மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும்.’எனத் தெரிவித்தார்.

 

கோவில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘தீபத் திருவிழாவை ஒட்டி, நவம்பர் 29- ஆம் தேதி தவிர பிற நாட்களில், காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் 800 பக்தர்கள், கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்படுவர். கரோனா காரணமாக உற்சவ மூர்த்திகளும், தேர்த் திருவிழாவும் கோவில் வளாகத்துக்குள் நடத்தப்படும். நவம்பர் 29- ஆம் தேதி  பக்தர்களுக்கு அனுமதியில்லை. நவம்பர் 30- ஆம் தேதி முதல் டிசம்பர் 2- ஆம் தேதி வரை, தெப்பத் திருவிழா கோவில் வளாகத்துக்குள் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் நடத்தப்படும். இந்த திருவிழாவுக்கும் பக்தர்களுக்கு அனுமதியில்லை. டிசம்பர் 3- ஆம் தேதி, சண்டிகேஸ்வரர் விழாவுடன் முடிவுக்கு வருகிறது’ எனத் தெரிவித்தார்.

 

‘ஆகம விதிகளின்படி விழாக்களை நடத்த வேண்டும். அரசியல் காரணங்களுக்காக மக்கள் கூடுவதை அனுமதிக்கும் அரசு, மத ரீதியான நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கிறது’ என ரங்கராஜன் நரசிம்மன் குறை கூறினார்.

 

உற்சவர் ஊர்வலத்தையும், தேர்த் திருவிழாவையும் மாட வீதிகளில் நடத்துவது குறித்து, மாவட்ட நிர்வாகம், காவல் துறை, கோவில் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர். மேலும், பொதுநலன் கருதியே அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. இதை குறை கூற முடியாது. அடுத்த ஆண்டு முதல் இயல்புநிலை திரும்பி, கார்த்திகை தீபத் திருவிழா வழக்கம் போலவே நடக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்