Skip to main content

‘காவி உடையில் திருவள்ளுவர்’ - ஆளுநர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழ்!

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
Thiruvalluvar in saffron the invitation issued by the Governor House

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஜனவரி மாதம் 16 தேதி (16.01.2024) திருவள்ளுவர் காவி உடை அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு திருவள்ளுவர் தினத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அதில், “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும் புலவரும், சிறந்த தத்துவ ஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.

அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் நாளை (24.05.2024) மாலை 5 மணிக்கு திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அச்சிடப்பட்ட திருவள்ளுவர் திருநாள் விழா அழைப்பிதழ் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன் முகப்பு பக்கத்தில் காவி உடையில் திருவள்ளுவர் உள்ளது போன்று அச்சிடப்பட்டுள்ளது. ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ்குமார் பெயரில் இந்த அழைப்பிதல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்தை வெளியிட்டதை கண்டித்து தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளுவர் திருநாள் விழா எனக் காவி உடையில் திருவள்ளுவர் படத்துடன் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழல் மக்கள் மத்தியில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

எருமை முட்டி இழுத்து சென்ற பெண்ணுக்கு மேலும் ஒரு துயரம்

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
Another tragedy for the woman dragged by the buffalo

சென்னை திருவொற்றியூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை எருமை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் ஒன்று இணையத்தில் வைரலாகிய நிலையில் அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேலும் ஒரு துயரம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே சென்னையில் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் திரியும் மாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தது. அது மட்டுமல்லாது முதியவர்கள் சிலர் மாடு தாக்கி உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்திருந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள கிராமத்து தெரு என்ற தெருவில் நடந்து சென்ற மதுமதி என்ற பெண்ணை எதிர்புறத்தில் நடந்து வந்து கொண்டிருந்த எருமை மாடு எதிர்பாராத விதத்தில் முட்டியது. மேலும் கொம்பில் சிக்கிக்கொண்ட அப்பெண்ணை தாறுமாறாக சுழற்றியதோடு. அங்கிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு மதுமதியை இழுத்துச் சென்றது. இந்தக் காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் அந்தப் பெண்ணை மீட்க வந்தவர்களையும் எருமை மாடு முட்டியது. இதில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

Another tragedy for the woman dragged by the buffalo

பாதிக்கப்பட்ட மதுமதியை உறவினர்கள் திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். அங்கு மதுமதியின் காலில் ஏற்பட்ட பலத்த காயத்துக்கு 48 தையலுக்கு மேல் போடப்பட்டிருந்தது. இந்தநிலையில் மதுமதியின் கால் தொடைப் பகுதி அழுகிவிட்டதாக தற்போது மருத்துவர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காலில் அழுகிய நிலையில் இருந்த சதையை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். அந்தப் பகுதியில் மற்றொரு காலில் உள்ள சதையை எடுத்து தைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் கொடுத்துள்ளனர்.

Next Story

கள்ளக்குறிச்சி விவகாரம்; முக்கிய குற்றவாளி கைது!

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
Forgery issue; The main culprit arrested

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பெண்கள் உட்பட 55 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் விசாரனையத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே கள்ளச் சாராயம் விற்பனை செய்த கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. 

Forgery issue; The main culprit arrested

அதனைத் தொடர்ந்து மெத்தனால் விற்பனையாளர்களான சின்னதுரை, மதன், ஜோசப்ராஜ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அதோடு  கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்த விவகாரத்தில் ராமர், சின்னதுரை மற்றும் ஜோசப் ராஜா ஆகிய 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கச்சிராபாளையம் போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்நிலையில் கள்ளச்சாராய வழக்கில் தேடப்பட்டு வந்த சிவக்குமார் என்பவர் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரவாயலைச் சேர்ந்த சிவக்குமார் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 55 பேரின் உயிரிழப்பு காரணமான கள்ளச்சாராயத்திற்கு மெத்தனால் சப்ளை செய்தவர் சிவக்குமார் ஆவார்.