
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3 வாரங்களாக ஓய்வூதியர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் ஓய்வு பெற்று 12 ஆண்டுகள் ஆகியும் ஓய்வூதிய பலன்கள் மற்றும் ஓய்வூதிய பண பயன்கள் கிடைக்கவில்லை. பல்கலைக்கழகத்தில் இருந்து பணி நிறைவுகளுக்கு சென்றவர்களை பல்கலைக்கழகத்திற்கு அழைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வர் கனிவுடன் பரிசளித்து நிறைவேற்ற வேண்டும்.
வருகிற மே 31-ஆம் தேதி திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதசார்பின்மையை காப்போம் மக்கள் எழுச்சி பேரணி நடைபெறுகிறது. மதசார்பன்மைக்கு எதிராக தொடுக்கப்படும் தாக்குதல்களை தடுக்கும் வகையிலும் வக்பு சட்டத் திருத்த சட்டத்தை வாபஸ் வாங்க வலியுறுத்தி இந்த பேரணி நடைபெறுகிறது. இதில் பல லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க உள்ளனர். அகில இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் இந்த பேரணி நடைபெற உள்ளது.
மதுரை ஆதீனம் செய்தியாளர் சந்திப்பில் அவரது உயிருக்கு இஸ்லாமியர்களால் பாதுகாப்பில்லை என கூறியது அதிர்ச்சி அளித்தது. இதுகுறித்து காவல்துறை சிசிடிவி வெளியிட்டதில் அம்மாதிரியான நிகழ்வு ஒன்றுமில்லை. இதில் தன்னச்சியாக நடைபெற்ற விபத்து அதிலிருந்து ஆபத்தின்றி தப்பித்துள்ளார். உயர்ந்த பொறுப்பில் உள்ள மடாதிபதி சமூகப் பதற்றம் ஏற்படாத வகையில் அமைதியை நிலை நாட்டுவதில் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் அவர் கொலை செய்ய முஸ்லிம்கள் முயற்சித்தார்கள் என்றெல்லாம் சொல்லியது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பை பரப்புவதற்காக ஒரு முயற்சியை சிறுபான்மை சமூகத்தினரை இந்து சமூகத்தினருக்கு எதிராக தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இதைக் குற்றச் செயலாக மாற்றுவதற்கு முயல்கிறார். அவரது பேட்டியை சாதாரணமாக கடந்து விட முடியாது. இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே வடகாடு கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிற சமயத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆதிதிராவிட பகுதிக்கு சென்று நுற்றுக்கணக்கான வீடுகளையும் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களையும் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி நுணுக்கமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் 12 பேர் ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆதிதிராவிடர் பகுதியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலை மாற்றுச் சமூகத்தினர் எங்களுக்கும் சொந்தம் என கூறி அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு ஆதிதிராவிட மக்கள் நீதிமன்றத்திற்கு சென்று கோவில் அவர்களுக்கே உரியது என தீர்ப்பு பெற்றுள்ளனர். இந்த நிலையில் திருவிழாவின்போது தேரை இழுக்க வந்த ஆதிதிராவிட மக்களை கடுமையாக தாக்கியது கண்டனத்துக்குரியது. இதில் காவல்துறையினர் சரியான முறையில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வில் தாலி, மூக்குத்தி உள்ளிட்டவைகளை கழட்டச் சொல்வது சட்டத்திற்கு புறம்பானது, அநாகரிகமானது. இது எங்கே வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் என்று தெரியவில்லை. முன்னாள் மாநில தலைவர் தற்போதைய மாநிலத் தலைவர் போல் பேசி வருகிறார். புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் உள்ளதை மறந்து பேசுகிறார். நயினார் நாகேந்திரன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிமுக கூட்டணி புதிய கூட்டணி அல்ல, ஏற்கனவே 2021 இல் தேர்தலில் பரிசோதித்த கூட்டணி தான் எத்தகைய வலுவான கூட்டணி என தேர்தல் முடிவுகள் வலுவாக தெரிவித்துள்ளது. இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை முடிசூடா மன்னராக இருந்த நான் தற்போது கூட்டணியில் பாஜக இருந்ததால் தோல்வி அடைந்து விட்டேன் என ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்துள்ளார். அவர்கள் ஆட்சியைக் கைப்பற்ற மாயை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் பாதிப்பு ஏற்படத்தான் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தில் ஆதிதிராவிட சமூக இளைஞர்களை திட்டமிட்டு கைது செய்யும் நடவடிக்கை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. இதில் திருச்சிக்கு தேர்வு எழுதச் சென்ற மாணவரையும் அழைத்து வந்து கைது செய்துள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருதி காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார். இவருடன் காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ சிந்தனைச் செல்வன் மாவட்டச் செயலர் அரங்க. தமிழ் ஒளி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.