Skip to main content

கட்சி நிர்வாகி கன்னத்தில் கைவைத்த எம்.எல்.ஏ. – தலைமையிடம் புகார்

Published on 09/12/2018 | Edited on 09/12/2018
mi

 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சியின் சார்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட கட்டிடம் திறப்பு விழா டிசம்பர் 7ந்தேதி மதியம் நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஆரணி தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான சேவூர்.ராமசந்திரன், அதிமுக வடக்கு மா.செவும், செய்யார் தொகுதி எம்.எல்.ஏவுமான தூசி.மோகனும் வருகை தந்திருந்தார்.


விழா நடைபெற்றுக் கொண்டியிருந்தபோது, விழாவிற்கு வந்துயிருந்த வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளர் நித்தியானந்தம், மா.செ மோகனிடம், கட்சி நிகழ்ச்சி எதுக்கும் என்னை அழைக்கறதில்லை, தகவல் சொல்றதில்லை, என்ன நினைச்சிக்கிட்டுயிருக்கிங்க மனசுல. தலைமை கழக பேச்சாளர்ன்னு ஒருத்தனை கூப்ட்டு வந்து பேசவைக்கற, கட்சி சாதனைகளை பேசடான்னு சொன்னா, கொச்சையா பேசறான், இதெல்லாம்மா கட்சிக்கு அழகு என பொரிந்து தள்ளினார்.


சாதாரண கட்சி நிர்வாகி நீ, எம்.எல்.ஏவான என்னையப்பார்த்து கேள்வியா கேட்கற என எம்.எல்.ஏ மோகன் திட்டினார். பதிலுக்கு நித்தியானந்தம் திட்ட அந்தயிடத்தில் டென்ஷன் அதிகமானது. அப்போது மோகன் ஆதரவாளர்கள் நித்தியானந்தத்தை அடிக்க பாய்ந்தனர். நித்தியானந்தம் கேள்விக்கேட்டா அடிக்க வருவிங்களா என கேள்விக்கேட்க, அடிப்போம்டா எனச்சொல்லி எம்.எல்.ஏ மோகன், கேள்வி கேட்ட கட்சி நிர்வாகியின் கன்னத்தில் அடித்ததாக கூறப்படுகிறது.


இது அமைச்சர் முன்னிலையில் நடந்துள்ளது. உடனே நித்தியானந்தத்தை அங்கிருந்து அழைத்து சொல்லச்சொல்லியுள்ளார். அதன்படி நிர்வாகிகள் அவரை அந்தயிடத்தில் இருந்து தூரமாக அழைத்து சென்றுவிட்டுள்ளனர். அதன்பின் எம்.எல்.ஏ மோகனை சமாதானம் செய்து விழாவை நடத்தி முடித்துள்ளார் அமைச்சர்.


கேள்விக்கேட்டதால் தன்னை எம்.எல்.ஏ அடித்தது தொடர்பாக நித்தியானந்தம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், கட்சி தலைமை அலுவலகத்துக்கு புகார் அனுப்பிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
 

சார்ந்த செய்திகள்