Skip to main content

“தமிழ்நாட்டில் மக்களுக்கும், காவல் துறைக்கும் பாதுகாப்பில்லை...” - எடப்பாடி பழனிசாமி!

Published on 30/05/2024 | Edited on 30/05/2024
There is no security for the people and the police dept in Tn says EPs

தமிழ்நாட்டில் மக்களுக்கும், காவல் துறைக்கும் பாதுகாப்பில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அதிமுக ஆட்சிக் காலங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதிலும் சுதந்திரமாக காவல் துறை செயல்பட்டு வந்தது. ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பேற்கும் பொழுதெல்லாம் தனது சுய முகவரியை இழந்து, ஆளும் கட்சியின் கைப்பாவையாக மாறி, சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் கைக்கட்டி வேடிக்கை பார்த்து வரும் நிலை மிகவும் வெட்கக்கேடானது.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் மாட்சிமை பொருந்திய ஆட்சியா?, சட்டவிரோத ஆட்சியா? என்று தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கிறனர். கடந்த 36 மாத திமுக ஆட்சியில் சட்டத்தைக் காக்கக்கூடிய காவலர்களின் கையைவிட, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரின் கைகளே ஓங்கி இருக்கின்றன என்பது பல்வேறு கொடும் சம்பவங்கள் மூலம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கள்ளச் சாராய சாவுகள், கோவையில் கார் குண்டு வெடிப்பு, அன்றாடம் நடைபெறும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை ஆகியவற்றுடன் தலைவிரித்தாடும் போதைக் கலாச்சாரம் என்று நாள்தோறும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு சம்பந்தமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், காவல் துறையின் கைகளையும், கண்களையும் கட்டிப்போட்டு, தாம் ஏவும் இடங்களில் மட்டும் பாய வைப்பது வெட்கக்கேடான ஒன்றாகும். தற்போதுள்ள ஆட்சியாளர்களால் தங்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்ற இருமாப்போடும், துணிச்சலோடும் சமூக விரோத சக்திகள் ஆட்டம் போடுகின்றன. மக்களுக்கும் பாதுகாப்பில்லை, காவல் துறைக்கும் பாதுகாப்பில்லை என்ற நிலையில் தமிழக ஆட்சி சக்கரம் நிலைகுலைந்து போயுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்