Skip to main content

தென்மாவட்ட மக்களால் மறக்க முடியாத அக்டோபர் பத்தாம் தேதி!!

Published on 10/10/2018 | Edited on 10/10/2018

தென்மாவட்ட மக்களால் மறக்க முடியாத ஒரு நாளாக இன்றைய நாளான அக்டோபர் பத்தாம் தேதி இருக்கிறது. அப்படி என்னதான் இந்த அக்டோபர் பத்தாம் தேதி. முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்த நாள் தான் இந்த அக்டோபர் பத்தாம் தேதி.

 

ஆம் 123 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு முதன்முதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த வரலாற்றுச் சுருக்கத்தை பார்ப்போம்..

 

''நீரின்றி அமையாது உலகு'' என்பது வள்ளுவன் வாக்கு. உயிர்களின் வாழ்வாதாரங்களில் மிக முக்கியமானது நீர் மனித உயிர்களால் உற்பத்தி செய்யமுடியாத இந்த நீர், இயற்கை மனிதனுக்கு அளித்த மாபெரும் கொடையாகும். 

 

mulai periyaaru

 

18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தென்தமிழகத்தை வளப்படுத்தி வந்த ஆறுகள் பொய்த்துப்போனதால் சீர்குலைந்த வேளாண்மையை மேம்படுத்தவும், இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், சுந்தரகிரி மலையில் சிவகிரி சிகரத்தில் தோன்றி பெருந்துறையாறு, சின்னாறு, சிறுதோணியாறு, கட்டப்பனையாறு, இடமலையாறு மற்றும் முல்லையாற்றை சேர்த்துக்கொண்டு 300 கிலோமீட்டர்  வடமேற்கு திசையில் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும் பெரியாறை தென்தமிழகம் நோக்கி திருப்பி கொண்டுவர முயற்சிகள் நடைபெற்றது. 

 

 

1798-ல் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் மற்றும் அமைச்சர் முத்து அருளப்பரினால் துவக்கப்பட்டது.1808-ல் ஜேம்ஸ் கால்டுவெல், 1862-ல் மேஜர் ரைவீஸ், மேஜர் பேயின், 1870-ல் ஸ்மித் என பலர் ஆய்வுகளும், திட்டங்களும் தயார் செய்தாலும், இறுதியில் முல்லையாற்றிற்கும் பெரியாற்றிற்கும் நடுவே 152 அடி உயர அணைகட்ட முடிவு செய்தது பிரிட்டீஷ் அரசுதான். அணைகட்டும் பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டது என்பதால் அணைநீரானது எல்லாக்காலங்களிலும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களோடு 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை அக் 29, 1886-ல் செய்துகொண்டது ஆங்கிலேய அரசு.

 

 

அந்த ஒப்பந்தத்தில் நீண்ட பல்நோக்கு திட்டத்தின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு அணை கட்டப்பட்டதால், இடர்பாடுகளையும், சேதங்களையும், தேவையற்ற பூசல்களையும் நீக்க இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தத்திற்கு உட்பட்ட நிலத்தில் தமிழக அரசு நீர்பாசனம் மற்றும் மின்சார உற்பத்திக்கான செயல்பாடுகளை செய்துகொள்ளலாம். அணையின் மராமத்துப் பணிகள் செய்வதற்கான பொருட்களை எடுத்துச்செல்ல முழுமையான உரிமை வழங்குவதுடன் அதற்கு வரி எதுவும் கிடையாது. அணையினுள் அடங்கும் மரம் மற்றும் மரக்கட்டைகளை, அணையின் நலம் கருதி செயல்படுத்தும் திட்டங்களுக்கு தமிழக அரசு எவ்வித கட்டணங்களும் கட்டவேண்டியது இல்லை. போக்குவரத்தின் முழு உரிமையும், பாதுகாப்பும் தமிழகத்திற்குச் சொந்தம். 

 

MULLAI

 

அணையின் அனைத்து செயல்பாடுகளுக்கும் உரிமை, அதிகாரம், சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தான் 43 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கர்னல் பென்னிகுக் தலைமையில் பிரிட்டீஷ் ராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணைகட்டும் பணியினை மேற்கொண்டது. அவரது தீவிர முயற்சியினால், 1895ல் முல்லைப்பெரியாறு அணையை கட்டிமுடிக்கப்பட்டது.

 

 

1895-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி   (இந்திய நேரப்படி) மாலை 6.00 மணிக்கு சென்னை மாகாண கவர்னர் வென்லாக் தேக்கடிக்கு வந்து, பெரியாறு அணை தண்ணீரைத் தமிழகப் பகுதிக்கு திறந்துவைத்தார்.

 

அன்றிலிருந்து இன்று வரை கடந்த 123 ஆண்டுகளாய், தலைமுறைகள் கடந்தும் தண்ணீர் கொடுத்து தமிழகத்தை காத்து வருகிறது முல்லை பெரியாறு அணை. முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு, முதன் முதலாக தண்ணீர் திறக்கப்பட்ட நாளான அக்டோபர் 10-ம் தேதியை  கடந்த பல ஆண்டுகளாக  தேனி உள்பட நான்கு மாவட்டங்களிலுள்ள பொதுமக்களும், விவசாயிகளும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த முல்லைப் பெரியாறு மூலம்  நீர் தந்த வள்ளல் கர்னல் பென்னிகுக்கின் புகழும் உலகம் இருக்கும் வரை ஒழித்து கொண்டு இருக்கும் என்பது தான் உண்மை.

சார்ந்த செய்திகள்

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தண்ணீர் தட்டுப்பாடு ; தாக்குபிடிக்குமா 'சென்னை'

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Water scarcity; Attacking 'Chennai'

கோடைகால வெயிலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும் மேற்கொண்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் எனும் ஓ.ஆர்.எஸ் கரைசலை ஆயத்தமாக வைத்திருக்க தமிழக சுகாதாரத்துறைக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. 

கோடை காலங்களில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெயிலின் தாக்கத்தை தனித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி மூன்றாவது காரணியாக பார்க்கப்படுவது குடிநீர் தட்டுப்பாடு. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது போன்ற செய்திகள் தென்படுவதே இதற்கான சான்று. அதேபோல் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகம் கையாளும் இடமாக சென்னை உள்ளது. பல்வேறு ஏரிகளில் உள்ள நீர் இருப்பை நம்பியே சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது புழல் ஏரியில் இருக்கும் நீரின் அளவு 2,942 மில்லியன் கன அடி ஆகும். வினாடிக்கு 570 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 217 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்து சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோழவரம் ஏரி. 1,080 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 118 மில்லியன் கன நீர் மட்டுமே உள்ளது. தற்போது நீர்வரத்து இல்லாத நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அடுத்தது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை குடிநீர் தேவையில் முக்கிய பங்காற்றுகிறது. மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது நீர் இருப்பு 2,384 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 46 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையின் அடுத்த குடிநீர் ஆதாரம் பூண்டி ஏரி. 3,231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு 978 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த ஏரிக்கும் நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 525 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படும் நிலை இருக்கிறது. 1,475 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு கணக்கிட முடியாத அளவிற்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வீராணம் ஏரியில் நீர்வரத்தும் இல்லை நீர் வெளியேற்றமும் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

இப்படி மொத்தமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டிஎம்சி ஆக இருக்கிறது. இதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு விட்ட நிலையில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் தற்பொழுது 6.88 டிஎம்சி நீர் மட்டுமே இருக்கிறது. வரும் கோடை காலத்தில் இந்த அளவு தண்ணீரே சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.