கோவில் திருவிழாக்களை நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை எனச் சென்னை நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சீர்காழி ருத்ர மகா காளியம்மன் ஆலய ஆடித் திருவிழாவில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு. எனவே திருவிழாவிற்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் மீது இன்று விசாரணை நடைபெற்ற பொழுது, வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் பல்வேறு அதிருப்திகளை முன்வைத்தார். ''கோவில் திருவிழாக்களில் வன்முறை வெடிப்பது துரதிருஷ்டவசமானது. திருவிழாக்களில் வன்முறைகள் வெடித்தால் கோயில்கள் இருப்பதே அர்த்தம் இல்லை என்று ஆகிவிடும். அதற்குப் பதிலாக கோவில்களை மூடிவிடலாம். கோவில் திருவிழாக்களை நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை. யார் பெரியவர் என பலத்தை நிரூபிக்கவே கோவில் விழாக்கள் நடத்தப்படுகிறது. திருவிழாவிற்கு பாதுகாப்பு வழங்கும்படி காவல்துறைக்கும் உத்தரவிட முடியாது. சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் திருவிழாவை காவல்துறை நிறுத்த உரிமை உண்டு'' எனத் தெரிவித்து வழக்கை நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முடித்து வைத்தார்.