டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், காலணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டு உள்ளது.
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 28-வது கூட்டம் இடைக்கால நிதி மந்திரி பியூஷ் கோயல் தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டது. சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் பல பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டது. அதன்படி, சுமார் ரூ.7 ஆயிரம் கோடிக்கு வரிகள் குறைக்கப்பட்டு உள்ளன.
பெண்கள் பயன்படுத்தும் சானிடரி நாப்கின், கல், பளிங்கு கல், மரம் ஆகியவற்றில் செய்யப்படும் சாமி சிலைகள், சாதாரண ராக்கி கயிறு, துடைப்பம் செய்ய பயன்படும் கச்சா பொருள், இந்திய ரிசர்வ் வங்கி அல்லது அரசு வெளியிடும் நினைவு நாணயங்கள், செறிவூட்டப்பட்ட பால் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
வரி குறைக்கப்பட்டுள்ள பொருட்கள் விவரம்:
கைத்தறி ஜமக்காளம், எண்ணெய் கம்பெனிகளுக்கான எத்தனால் எண்ணெய், ரூ.1,000 வரையிலான காலணிகள் மீதான ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
மின்னணு புத்தகங்கள் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
இறக்குமதி செய்யப்படும் யூரியா மீதான வரியும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
கைப்பைகள், நகைப்பெட்டி, கலைநயத்துடன் கூடிய கண்ணாடி சட்டங்கள், கையினால் செய்யப்படும் விளக்குகள் ஆகியவற்றின் மீதான வரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
27 அங்குலம் வரையிலான டி.வி., வாஷிங் மெஷின், ரெப்ரிஜிரேட்டர், வீடியோ கேம்ஸ், வாக்குவம் கிளனர், டிராக்டர் டிரைலர், மிக்சி, கிரைண்டர், ஷேவிங் கருவி, ஹேர்டிரையர், அழகுசாதன பொருட்கள், வாசனை திரவியங்கள், வாட்டர் கூலர், வாட்டர் ஹீட்டர், அயர்ன் பாக்ஸ், தோலில் செய்யப்படும் பொருட்கள், லித்தியம் அயன் பேட்டரி, பெயிண்ட், வார்னிஷ், வால் புட்டி ஆகியவற்றின் மீதான ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
வரி குறைக்கப்பட்டு இருப்பதால் மேற்கண்ட பொருட்களின் விலை குறையும். இந்த வரி குறைப்பு வருகிற 27-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.